லெபனான் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், போராளி இயக்கமான ஹெஸ்புல்லா – அமல் கட்சி கூட்டணி வெற்றி முகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இஸ்ரேல், சிரியாவை அண்டை நாடாக கொண்ட லெபானானில் கடைசியாக 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதன்பின்னர், பிராந்திய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு முறை பாராளுமன்றத்திற்கு நீட்டிப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 6-ம் தேதி தேர்தல் நடந்தது.
128 இடங்களுக்காக நடந்த வாக்குப்பதிவில் 49 சதவிகித வாக்குகள் பதிவானது. கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வசிக்கும் லெபனானில், அதிபராக கிறிஸ்தவரும், பிரதமராக சன்னி இஸ்லாமியரும், சபாநாயகராக சன்னி இஸ்லாமியரும் இருக்க வேண்டும் என்பது அரசியல் சட்டம்.
வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் முழுவதும் வெளியாகாவிட்டாலும், போராளி இயக்கமான ஹெஸ்புல்லா அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெஸ்புல்லா மற்றும் அமல் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.
ஷியா பிரிவு போராளி இயக்கமான ஹெஸ்புல்லாவுக்கு ஈரானின் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

