காவிரி வரைவு செயல் திட்டத்தை 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

517 0

காவிரி வரைவு செயல் திட்டத்தை வரும் 14-ம் தேதி (கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர்) தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் இருப்பதால் அதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இதற்கிடையே, கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பங்கீடை விட கூடுதல் நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் திறக்க முடியாது என அதில் கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், “கர்நாடக அணைகளில் தற்போது 19 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதில், 4 டி.எம்.சி தண்ணீரை உடனே ஒதுக்க உத்தரவிட வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படவில்லை. வரும் 12-ம் தேதி கர்நாடக தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment