அரசு ஊழியர்- ஆசிரியர் போராட்டத்தை அடக்கு முறை கொண்டு தமிழக அரசு தடுக்க நினைக்கிறது என்று மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த முன்னணி நிர்வாகிகளை சென்னையில் காவல் துறையினர் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீதான கைது நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. அரசு ஊழியர்- ஆசிரியர் போராட்டத்தை அடக்கு முறை கொண்டு தமிழக அரசு தடுக்க நினைக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒப்புக்கொண்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
நீட் தேர்வு எழுத சென்ற 2 மாணவர்களின் தந்தையை இழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடியை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.சி.பி.எஸ்.சி. மத்திய கல்வி திட்டத்தை மாநில கல்வி பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.தமிழக சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த பிரதமரை முதல்வர் வலியுறுத்த வேண்டும்.
நெல்லை மாவட்டம், விஜயநாராயணபுரத்தில் மணல் கொள்ளையை தடுக்கச்சென்ற காவலர் ஜெகதிஷ்துரை படுகொலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மணல் மாபியா கும்பல் செயல்பாட்டை தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

