சிலர் தான் 2020 இல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதா? எனக் கேட்பதாகவும், சமூக வலைத்தளங்களிலும் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் 2020 இன் பின்னரும் ஓய்வு பெறப் போவதில்லையென உறுதியாக அறிவித்தார்.
மட்டக்களப்பு செங்களடி விளையாட்டு மைதானத்தில் இன்று (07) நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
தனக்கு ஓய்வு பெற முடியாது எனவும், இன்னும் தன்னால் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பலவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
தூய்மையான அரசியல்வாதிகள் எத்தனை பேர் இந்த நாட்டில் உள்ளனர்? பொதுச் சொத்தைத் திருடாத எத்தனை பேர் உள்ளனர்? சிலர் 2020 இல் அதிகாரத்துக்கு வர நினைக்கின்றனர். இருப்பினும், அவர்களிடம் எந்தவித காத்திரமான வேலைத்திட்டமும் காணப்படாதுள்ளது.
இவ்வாறு அதிகாரத்துக்கு வர நினைப்பவர்கள் ஏழை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கற்னை உலகில் இருந்து கொண்டு பல கதைகளை சிலர் கூறுகின்றனர். இவர்களால் கனவு காணமுடியும். இத்தகையவர்களுக்கு ஏழை மக்களைப் பற்றிய எந்தவொரு கவலையும் இல்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் நாட்களில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தெளிவான வேலைத் திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லவுள்ளது. அந்த புதிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு நான் சகலரையும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி தனது நீண்ட உரையில் மேலும் கூறினார்.

