பிரிட்டனில் சுமார் 1500 இளநிலை மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், கம்யூட்டரின் கோளாறு காரணமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு சமீபத்தில் 1500 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். 24 மருத்துவ பிரிவுகளில் நியமிக்கப்பட்ட இவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கம்ப்யூட்டர் குளறுபடி காரணமாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகமாக பதிவாகியுள்ளது தற்போது தெரியவந்தது. தேர்வு குறித்த தகவல்களை ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு மாற்றும் போது இந்த தவறு நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து, இளநிலை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.
வேலை கிடைத்த சந்தோஷத்தில் இருந்தவர்களுக்கு இந்த செய்தி இடியாக தலையில் இறங்கியுள்ளது. சொந்த ஊரை விட்டுவிட்டு பணி ஒதுக்கப்பட்ட ஊருக்கு சென்று வீடு பார்த்து, குழந்தைகளை அங்குள்ள பள்ளியில் சேர்த்த பின்னர் வேலை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது மிக வேதனை அளிப்பதாக பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
பண ரீதியிலும், மன ரீதியிலும் மருத்துவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம் இதற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என பிரிட்டன் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

