சென்னைக்கு  குடிநீர்  தட்டுப்பாடு  அபாயம்!

278 0

பூண்டி, வீராணம் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த டிசம்பர் 27-ந்தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அதிகபட்சமாக 610 கன அடி வரை பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது.

கண்டலேறு அணையில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரிக்கு மார்ச் 26-ந்தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் 2.280 டி.எம்சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

இதனால் பூண்டி ஏரியில் ஓரளவு நீர்மட்டம் உயர்ந்ததால் பிப்ரவரி 27-ந்தேதி முதல் புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 29-ந்தேதி புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 21-ந்தேதி முதல் செம்பரம் பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது பூண்டி ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டது. தற்போது 294 அடி திறக்கப்படுகிறது.

பூண்டி ஏரியில் தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 20.10 அடியாக பதிவானது. 279 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. பூண்டி ஏரியின் நீர்மட்டம் 17 அடிக்கு கீழ் குறைந்ததால் சென்னை ஏரிகளுக்கு நீர் திறப்பு சாத்தியமாகாது.

இதேபோல் கோடை வெயில் மற்றும் நீர் வரத்து இல்லாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் சேர்த்து 3319 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நீர் வரத்து இல்லாததால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கோடையை சமாளிப்பதற்காக நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னையில் இப்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையாலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வீராணம் ஏரி கடல்போல் காட்சி அளித்தது.

இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 மாதமாக மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது.

கடந்த மார்ச் 22-ந் தேதி சென்னைக்கு அனுப்பும் குடிநீர் நிறுத்தப்பட்டது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீரின்றி வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, கடந்த ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கல்குவாரியில் உள்ள தண்ணீரை சுத்தம் செய்து பயன்படுத்திய நிலை ஏற்பட்டது.

சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு மாதத்துக்கு 1000 மில்லியன் கன அடி நீர் தேவைப்படும். தற்போது 4 ஏரிகளிலும் 3 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளதாலும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்தும் நீர் கிடைப்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று தெரிவித்தார்.

Leave a comment