கர்நாடக தேர்தலில் போட்டியிடும் 2655 வேட்பாளர்களில் 883 பேர் கோடீசுவரர்கள்

572 0

கர்நாடக தேர்தலில் 2655 வேட்பாளர்களில் 883 பேர் கோடீசுவரர்கள். இவர்களில் 208 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், 207 பேர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 

கர்நாடக மாநில சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் 2655 பேர் போட்டியிடுகிறார்கள்.

இந்த வேட்பாளர்களின் தகுதி, நன்னடத்தை, கல்வி மற்றும் பொருளாதார வசதி பற்றி ஜனநாயக சீர்திருத்த கழகம் எனும் அமைப்பும் கர்நாடகா தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் சேர்ந்து ஆய்வு நடத்தின. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் மூலம் மொத்தம் உள்ள 2655 வேட்பாளர்களில் 883 பேர் கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. அதாவது மொத்த வேட்பாளர்களில் 35 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.

கோடீசுவர வேட்பாளர்களில் அதிகபட்சமாக 208 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். 207 பேர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள். மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களில் 154 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.

2655 வேட்பாளர்களில் நம்பர்-ஒன் பணக்காரர் என்ற பெருமையை கோவிந்தராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியா கிருஷ்ணா பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1020 கோடி ஆகும்.

இரண்டாவது, மூன்றாவது பணக்கார வேட்பாளர்கள் என்ற சிறப்பும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே கிடைத்துள்ளது. ரூ.1015 கோடி சொத்து வைத்துள்ள ஹொச சோட் காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜ் 2-வது இடத்திலும், கனகபுரா காங்கிரஸ் வேட்பாளர் சிவகுமார் ரூ.840 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்திலும் உளளனர்.

17 வேட்பாளர்கள் தங்கள் பெயரில் எந்த சொத்தும் இல்லை என்று கூறியுள்ளனர். பொம்மனஹள்ளி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திலிப்குமார் தன்னிடம் ரூ.1000 மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்களில் பணக்காரர்கள் அளவுக்கு கிரிமினல் குற்றவாளிகளும் இருக்கிறார்கள். 391 வேட்பாளர்கள் மீது பல்வேறு விதமான குற்றவியல் வழக்குகள் உள்ளன. 254 வேட்பாளர்கள் மீது மிக தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

4 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கு, 25 பேர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளன. 23 வேட்பாளர்கள் மீது பெண்களை கற்பழித்த வழக்குகள் உள்ளன.

குற்ற பின்னணி உள்ள வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க., காங்கிரசை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

2655 வேட்பாளர்களில் 981 பேர் பட்டதாரிகள். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் 1351 பேர். 50 பேருக்கு படிப்பறிவே இல்லை.

மொத்த வேட்பாளர்களில் 209 பேர் பெண்கள். 309 வேட்பாளர்கள் தங்கள் விண்ணப்பத்தில் பான் எண்ணை குறிப்பிடவில்லை. என்றாலும் அவர்களது விண்ணப்ப மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.2655 வேட்பாளர்களில் 301 பேர் 61 முதல் 70 வயது உடையவர்கள். 46 பேர் 71 முதல் 80 வயதுடையவர்கள். 5 வேட்பாளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

Leave a comment