ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் சேருவீர்களா? – கராத்தே தியாகராஜன் பதில்

364 0

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதில் சேருவீர்களா? என்ற கேள்விக்கு கராத்தே தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு, ரஜினி நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அரசியல் பிரவேசத்துக்கான ஆயத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதிகாரப்பூர்வமான அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பு எப்போது வரும்? என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், சென்னை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

காலை 9.30 மணிக்கு உள்ளே சென்ற அவர், சுமார் ஒரு மணி நேரம் அவருடன் பேசிவிட்டு, 10.30 மணியளவில் வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கராத்தே தியாகராஜன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரஜினிகாந்துடன் திடீர் சந்திப்பு எதற்காக? அரசியல் தொடர்பான சந்திப்பா? அவர் கட்சி தொடங்கினால் அதில் நீங்கள் சேருவீர்களா?

பதில்:- திடீர் சந்திப்பு என்பதெல்லாம், இல்லை. அவர் எனக்கு ஒரு நல்ல சகோதரர். அவரை அடிக்கடி சந்திப்பது வழக்கம் தான். அரசியல் தொடர்பாக பேசினோம். சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிவிடுவார். அடிக்கடி அவரை சந்திப்பதினால் கட்சியில் சேருவதாக அர்த்தமா? நான் காங்கிரஸ் கட்சிக்காரன். ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் சக்திவாய்ந்த தலைவராக தான் வருவார்.

கேள்வி:- அரசியல் தொடர்பான கருத்துகளை அண்மைகாலமாக அதிகளவில் ரஜினிகாந்த் சொல்லி வருகிறாரே?

பதில்:- ரஜினிகாந்த் 1996-ல் இருந்து முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து சொல்லி தான் வருகிறார். டி.டி.வி.தினகரனை எடுத்துக்கொண்டால், 2008-ம் ஆண்டில் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து தான் கருத்து சொல்லி வருகிறார். ஏற்கனவே 2013-ம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்த விழாவில் கருணாநிதி, ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்தார். அதேபோல், 2004-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். அந்த கருத்தை தன்னுடைய கட்சி ‘லெட்டர் பேடில்’ ஜெயலலிதா குறிப்பிட்டு காட்டி இருந்தார். ஆளுமைமிக்க ஜெயலலிதாவுக்கே அப்போது இவருடைய ஆதரவு தேவைப்பட்டு இருக்கிறது.

கேள்வி:- ‘நீட்’ தேர்வு தொடர்பாக ரஜினிகாந்த் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே?

பதில்:- இப்போது நான் சந்தித்த போது கூட அவர் நீட் தேர்வு குறித்து பேசினார். தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலத்தில் தேர்வு மையம் அமைத்தது தவறானது என்று குறிப்பிட்டு சொன்னார்.

கேள்வி:- பாரதிராஜா ரஜினிகாந்தை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகிறாரே?

பதில்:- அவர் ஒரு ஓய்வு பெற்ற இயக்குனர். கடந்த ஆண்டு இதே பாரதிராஜா திரைப்பட இன்ஸ்டியூட்டை திறக்க நடிகர் ரஜினிகாந்தை அழைத்த போது கருத்து தெரிவிக்காதது ஏன்?
இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Leave a comment