எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. அணியில் இருக்கிறேன் – வைகோ

3907 0

நாங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. அணியில் இருக்கிறோம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க. 25-வது ஆண்டு விழாவையொட்டி பொதுச் செயலாளர் வைகோ ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-

கேள்வி: உங்கள் கட்சியின் 25 ஆண்டு கால செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

பதில்: ஒரு விடுதலை இயக்கம் அரசியலில் பயணம் செய்தால் எதையெல்லாம் சந்திக்க வேண்டுமோ? அதை ம.தி.மு.க.வும் சந்தித்து வருகிறது. நான் அரசியலில் எதையும் எதிர்பார்த்து வரவில்லை. எனக்கு மத்திய மந்திரி வாய்ப்பு வந்தபோது கூட அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.

எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் கூட தேர்தலையே புறக்கணித்தோம். நாங்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக மட்டும் போராடவில்லை. முக்கியமான அனைத்து பிரச்சினைகளுக்கும் முன்னின்று போராடி வருகிறோம்.

காவிரி பிரச்சினை, டாஸ்மாக் மதுக்கடை பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்காகவும் போராடுகிறோம். பல்வேறு பின்னடைவுகளுக்கு பிறகும் கட்சியை நடத்துவது என்பது கடுமையான பணி ஆகும்.

ஆனாலும் கட்சியின் தொண்டர்களால் சிறப்பான முறையில் கட்சியை நடத்தி வருகிறோம். இந்த 25 ஆண்டுகால கட்சி வரலாற்றில் எங்களால் முக்கிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

கே: திராவிட இயக்கங்களுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கருதுகிறீர்களா?

ப: ஆமாம். இந்துத்வா இயக்கங்கள் தமிழ்நாட்டில் முக்கிய அடித்தளத்தை அமைக்க முயற்சித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சில தமிழ் தேசிய அமைப்புகள் திராவிடத்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

தமிழ் தேசியம் என்பது திராவிட இயக்கத்தின் ஒரு அங்கமாகும். மெட்ராஸ் மாகாணம் இருந்தபோது அதில் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்தன. அதை வைத்து தான் தந்தை பெரியார் அந்த இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பல திராவிட இயக்கங்கள் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர். ம.தி.மு.க. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும். நாங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. அணியில் இருக்கிறோம்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் என்னை மூத்த சகோதரராக நினைத்து மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார்.

கே: தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உங்களை கடுமையாக விமர்சித்து வருகிறாரே? குறிப்பாக உங்களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் பிரபாகரனோடு இருந்த ஈடுபாடு பற்றி விமர்சிக்கிறாரே?

ப: இலங்கை போர் உச்ச கட்டத்தில் இருந்த நேரத்தில் இதுபோன்ற தலைவர்கள் எல்லாம் களத்திலேயே இல்லை. பிரபாகரனுடன் 5 நிமிடம், 10 நிமிடம் மட்டும் இருந்தவர்கள் இப்போது ஈழப்பிரச்சினைக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

நான் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 18 மாதம் ஜெயிலில் இருந்தேன். விடுதலைப்புலிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக எனது தம்பி கைது செய்யப்பட்டார். நான் விடுதலைப் புலிகளுடன் போரில் பங்கு பெற்றவன். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து இப்போது சிலர் உரிமை கொண்டாடி பேசலாம்.

ஆனால் இலங்கை தமிழர்களுக்கும் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும் ஈழப்பிரச்சினையில் நான் எப்படி உதவியாக இருந்தேன், எதிலும் விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை உறுதியாக நின்றேன் என்பதும் நன்றாக தெரியும்.இவ்வாறு வைகோ கூறினார்.

Leave a comment