மகிந்த அணியுடன் இணையும் கருணாவின் கட்சி!

317 0

கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எதிர்காலத்தில் மகிந்த அணியுடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் வந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில், எமது கட்சி ஏழு உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.

தமிழர்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற பிரதான நிலைப்பாட்டில் மட்டக்களப்பு தெற்கு பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கான ஆதரவினை வழங்கியிருந்தோம்.

மட்டக்களப்பு வடக்கு பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு எங்களது ஆதரவினை வழங்கியிருந்தோம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்கான தேர்தல் தொகுதிகள் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐந்து தமிழர்களையும், ஒரு இஸ்லாமியரையும் உறுப்பினராக கொள்ளும் வகையில் எல்லை நிர்ணய குழுவில் எங்களது சிபாரிசுகளை வழங்கியிருந்தோம்.

ஆனால் வெளியிடப்பட்டுள்ள தொகுதி முறை கிழக்கு மாகாண தமிழர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் வகையில் அமைந்துள்ளது.

75 வீதமான தமிழர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் உறுப்பினர்களையும், 25 வீதம் கொண்ட முஸ்லிம்களுக்கு இரண்டு பிரதிநிதிகளையும் பெற்று கொள்ளக் கூடிய முறையில் தொகுதி பிரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை ஒரு அபாய எச்சரிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம். இந்த நிலையில் தேசிய அரசில் மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணிப்பதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளோம்.

இதன்போது வெற்றிகரமான உடன்படிக்கையொன்றினையும் செய்துள்ளோம். இதன்கீழ் ஏராளமான தமிழ் இளைஞர்களை எமது கட்சியுடன் இணைத்து அரசியல் பாசறைகளை நடத்தி கட்சி செயற்பாடுகளில் ஈடுபடுத்தவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment