பாலஸ்தீனம் குண்டு வெடிப்பில் 6 ஹமாஸ் போராளிகள் பலி

12232 0

பாலஸ்தீனம் நாட்டின் காசா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆறு ஹமாஸ் போராளிகள் உயிரிழந்தனர்.

பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக இருக்கிறது.
இந்த போராளிகள், பாலஸ்தீன மக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்று விளங்குகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் உருவானதின் 70-வது ஆண்டு விழா அங்கு கொண்டாடப்பட்ட வேளையில் அதை துக்க தினமாக பாலஸ்தீனர்கள் கருதினர். இதையொட்டி நடந்த போராட்டங்களின்போது 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்தது. இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழி வகுத்தது. இருப்பினும் தொடர்ந்து காசா எல்லைப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், காசாவில் நேற்று நடந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆறு ஹமாஸ் போராளிகள் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ராணுவம் தான் காரணம் என ஹமாஸ் போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது.

Leave a comment