இஸ்ரேல் பிரதமர், மோடியுடன் தொலைபேசியில் பேச்சு

899 0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரான் விவகாரம் குறித்து பேசினார். 

ஈரான் 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், அந்த நாடு அணு ஆயுத திட்டங்களை நிறுத்தவும், அதற்கு பிரதிபலனாக மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கவும் வகை செய்கிறது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயல்பட்டு வந்து உள்ளதாகவும், அணு ஆயுத திட்டங்களை தொடர்ந்து வந்து உள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அதிரடி தகவல் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக வரும் 12-ந்தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் மார்ஷல், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோருடனும் அவர் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

அப்போது ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு உடன்பாட்டை மீறி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் அவர் விவாதித்தார்.

இந்த தகவல்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் ஊடக ஆலோசகர் வெளியிட்டு உள்ளார்.

Leave a comment