இந்தியா வந்தார் செர்பிய துணை பிரதமர் – 4 நாட்கள் சுற்றுப்பயணம்

16939 0

செர்பிய துணை பிரதமர் நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்த பயணத்தில் துணை ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஆகியோரை சந்திக்க உள்ளார்.

செர்பிய குடியரசு நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத் துறை மந்திரியுமான இவிகா டேசிக் இந்தியாவில் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று அதிகாலை அவர் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை இந்திய உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

நாளை (மே 2)ஆக்ரா செல்லும் இவிகா டேசிக், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து மதியம் டெல்லி புறப்படுகிறார்.  நாளை மறுநாள் (மே 3) அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுகிறார்.  தொடர்ந்து அன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ‘ஐரோப்பா மற்றும் உலகில் செர்பிய பிராந்தியம்’ என்ற தலைப்பில் அவர் சொற்பொழிவாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாலையில் துணை ஜனாதிபதியை வெங்கையா நாயுடுவை சந்தித்து பேச உள்ளார். மேலும், இரு நாட்டு உயர் அதிகாரிகள் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்திய சுற்றுப்பயணம் முடிந்து மே 4-ம் தேதி புறப்படுகிறார். இந்திய பயணத்தைத் தொடர்ந்து நேபாளம் மற்றும் இலங்கையில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Leave a comment