வவுனியாவில் த.தே.கூட்டமைப்பு சபைகளை இழக்க சிவசக்தி ஆனந்தனே காரணம்!-சத்தி

278 0

வவுனியாவில் தேசிய கட்சிகளுக்கு எதிராக தமிழ் கட்சிகளாக ஒன்றிணைந்து ஆட்சியமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவை பேசிய போதிலும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டதாக வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுவே சில சபைகளை கூட்டமைப்பு இழக்க காரணம் என அவர் கூறியுள்ளார்.

வன்னியின் சில பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் வேறு கட்சிகள் ஆட்சி அமைந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே ப.சத்தியலிங்கம் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தல் முறை வித்தியாசமான பல பாதிப்புக்களை ஏற்படுத்திய முறையாக இருந்தாலும் கூட அரசியல் கட்சியாக இருந்தவர்கள் பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்காரணத்தினாலேயே வவுனியா உட்பட வட மாகாணத்திலே தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக ப.சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார்.

யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின் காலப்பகுதியிலேயே பெருந்தொகையான சிங்கள மக்கள் வவுனியா வடக்கில் குடியேற்றப்பட்டார்கள் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு மக்களில்லாத பகுதிகளுக்கு யானை வேலிகள் அமைத்து குடியேற்றவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

வந்து குடியேறியவர்களின் கையில் வவுனியா வடக்கின் ஆட்சி போகவேண்டிய நிலை இருந்தது எனவும் எமக்குள்ளே என்னதான் பிரிவு இருந்தாலும் தமிழ் பேசுகின்றவர்கள் என்ற வகையிலும் தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் என்ற வகையிலும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம் எனவும் ப.சத்தியலிங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment