டெல்டா மாவட்டங்களில் மத்திய அதிரடி படை பயிற்சிக்காக வந்தது- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

222 0

டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ள மத்திய படையினர் பயிற்சிக்காகவே வந்துள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுமே மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரையில் காவிரி போராட்டங்கள் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக சென்னையில் கடந்த 10-ந் தேதி நடந்த ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. போலீசார் மீது தாக்குதல், தடியடி சம்பவங்களும் அரங்கேறின.

இந்த நிலையில் தற்போது காவிரி போராட்டத்தின் வீரியம் கொஞ்சம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பதட்டம் நீடிக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், இந்த மாவட்டங்களில் கச்சா எண்ணை எடுக்கும் பணியை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் கச்சா எண்ணை எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அதிவிரைவு படையினர் 54 பேர் நேற்று கோவையில் இருந்து திடீரென கும்பகோணம் வந்தனர். கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த இடங்களில் அவசர காலங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது எப்படி? என்பது பற்றியும், எந்தெந்த பகுதிகள் பதட்டமானவை என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபோன்ற பதட்டமான பகுதிகளில் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில்தான் கும்பகோணத்திலும் அதிவிரைவு படையினர் ஆய்வு மேற்கொண்டிருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வு பணியின் போது உள்ளூர் போலீசாரிடம் தங்களுக்கு தேவையான தகவல்களையும் அதிவிரைவு படையினர் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ள மத்திய படையினர் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “மத்திய படையினர் பயிற்சிக்காகவே வந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

பின்னர் மத்திய அதிவிரைவு படையைச் சேர்ந்த 54 வீரர்களும் ஆய்வு பணியை முடித்துக் கொண்டு நேற்று இரவே கோவைக்கு புறப்பட்டு சென்று விட்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் பதட்டமான சூழல் நிலவுவதால் எப்போது வேண்டுமானாலும் அதி விரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.

இதனை கருத்தில் கொண்டே மத்திய பாதுகாப்பு படையினர் ஆய்வு பணியை முடித்து விட்டு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment