ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?- பேராசிரியர் முருகனின் மனைவி ஆவேசம்

232 0

கவர்னருடன் நிர்மலா தேவி புகைப்படம் எடுக்க அனுமதித்தவரை பிடித்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா கூறினார். 

நிர்மலாதேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை ஒத்தக்கடையில் உள்ள பேராசிரியர் முருகனின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இன்று 4-வது நாளாக முருகன் மற்றும் கருப்பசாமியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா இன்று காலை மதுரை சுற்றுலா மாளிகை வந்தார். அங்கு விசாரணை அதிகாரி சந்தானத்தை சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் வெளியே வந்த சுஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

நிர்மலாதேவி விவகாரத்தில் எனது கணவர் முருகன் மற்றும் கருப்பசாமியை பலிகடாவாக்கி வழக்கை முடிக்க பார்க்கின்றனர். நிர்மலாதேவிக்கும், எனது கணவருக்கும் எந்த பழக்கமும் இல்லை.

கடந்த 4 மாதமாகத்தான் அவரை தெரியும். புத்தாக்க பயிற்சிக்கு வந்த நிர்மலா தேவிக்கு அறை ஒதுக்கி கொடுப்பதில்தான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 3 முறை தான் அவரை எனது கணவர் முருகன் சந்தித்துள்ளார்.

நிர்மலாதேவி விவகாரம் பிரச்சனையான நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் எங்களை சந்தித்து, குடும்பத்தோடு தலைமறைவாக இருங்கள். இல்லாவிட்டால் போலீசார் குண்டர்சட்டத்தில் கைது செய்து விடுவார்கள் என்றார்.

ஆனால் எனது கணவர், நான் ஏன் பயப்பட வேண்டும் எனக்கூறித்தான் விசாரணைக்கு ஆஜரானார். அவரை கைது செய்து விட்டனர்.

இந்த வழக்கில் கவர்னருடன் நிர்மலாதேவியை புகைப்படம் எடுக்க வைத்தவரை பிடித்து விசாரித்தால்தான் உண்மை தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்

Leave a comment