பாகிஸ்தானுக்கு புதிய நிதி மந்திரி மிப்டா இஸ்மாயில் பதவி ஏற்றார்

210 0

பாகிஸ்தானில் நிதி மந்திரியாக இருந்த இஷாக் தர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து புதிய நிதி மந்திரியாக மிப்டா இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நிதி மந்திரியாக இஷாக் தர் பதவி வகித்து வந்தார். அவர் ஊழல் வழக்கில் சிக்கினார். அவர் மீதான வழக்கு இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிகிச்சைக்காக லண்டன் சென்றார். ஆனால் அவர் நாடு திரும்பவில்லை. இதன் காரணமாக அவர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் அந்த நாட்டின் 2018-19 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்வதற்கு சில மணி நேரம் முன்னதாக, புதிய நிதி மந்திரியாக மிப்டா இஸ்மாயில் நியமிக்கப்பட்டார். பிரதமர் அப்பாசி மேற்கொண்ட இந்த நியமன நடவடிக்கைக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் ஒப்புதல் அளித்தார்.அதைத் தொடர்ந்து அவர் புதிய நிதி மந்திரியாக பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் மந்திரிகளும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மிப்டா இஸ்மாயில் நியமனத்தை பொறுத்தமட்டில், மிக முக்கியமான அம்சம், அவர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லை. எனவே இது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.மேலும், இவர் பிரதமர் அப்பாசியின் நிதி, வருவாய், பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment