காவிரி விவகாரத்தில் மேலும் காலதாமதம் செய்வதா? – மத்திய அரசுக்கு, தமிழக அரசு கண்டனம்

229 0

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டுள்ள மத்திய அரசின் செயலுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு தெளிவாக உள்ளது. இந்தத் தீர்ப்பைத்தான் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உறுதிசெய்து உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு கொடுத்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதை நிறைவேற்றக்கோரி அவர்களுக்கு அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போன்றவை மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறோம். பிரதமர் இங்கு வந்தபோது, இதை முதல்-அமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.

மத்திய அரசு அதை அமல்படுத்தாத நிலையில், காலதாமதத்தை ஏற்க முடியாது என்று கூறி கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்துள்ளோம். இதில் சுப்ரீம் கோர்ட்டும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. எனவே காலம் தாழ்த்தும் செயலை தமிழக அரசு எந்த காரணத்துக்காகவும் அனுமதிக்காது.

இந்த நிலையில், மீண்டும் 2 வார கால அவகாசத்தை மத்திய அரசு கேட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. இதை எந்த நிலையிலும் அனுமதிக்கமாட்டோம். மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது தொடர்பாக என்னென்ன சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

கர்நாடகாவில் தேர்தல் நடக்கும் காரணத்துக்காக, டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்துவிட்டு, பயிர்கள் கருகுவதை ஏற்க முடியாது. இதில் தமிழகத்தின் ஒட்டுமொத்த கோபம், உணர்வுகளை மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் தெரிவித்து இருக்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் மூலம் நமக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும் என்பதில் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தற்போது 2 வாரம் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.ஆட்சேபனை செய்யும் நடவடிக்கை குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும். நிச்சயமாக தமிழக அரசின் ஆட்சேபனை கடுமையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment