மீனவர்களுக்கு நிவாரணத்தொகை: உயர்த்தி வழங்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

385 0

மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் சிரமமின்றி தொடர வேண்டுமென்றால் மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்குவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘‘தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து 61 நாட்களுக்கு மீன்பிடித்தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் இந்த நாட்களில் தான் மீன்களின் இனப்பெருக்க காலமாக அறியப்படுகிறது.

மேலும் மீன்களின் இனப்பெருக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கடல் சுற்றுச்சூழலை சமன் செய்யும் நோக்கமாகவும் மீன்பிடித்தடைக்காலத்தில் விசைப்படகுகளையும், இழுவைப்படகுகளையும் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் வலைகளை சீரமைப்பது, பழுது பார்ப்பது, வர்ணம் பூசுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்த 61 நாட்களுக்கான மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தமிழக அரசு கொடுப்பதாக அறிவித்த நிவாரணத்தொகை ரூபாய் 5 ஆயிரம் போதுமானதல்ல. மீன்பிடித்தடைக்காலத்தில் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 200 ரூபாய் எனக்கணக்கிட்டு கொடுத்தால் தான் ஓரளவிற்கு மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் மீன்பிடிக்க முடியாமல், வருமானம் ஈட்ட முடியாமல், படகுகளை சீரமைக்கவும், குடும்பத்தைக் காப்பாற்றவும் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

குறிப்பாக மீன்பிடிக்க தடையில்லாத காலங்களில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வாழ்வாதாரம் இலங்கை கடற்படையால் பெருமளவும் பாதிக்கப்பட்டு வருமானம் ஈட்ட முடியாமல், பொருளாதாரத்தை சேமித்து வைக்க முடியவில்லை. இச்சூழலில் மீன்பிடித்தடைக்காலத்திற்கான நிவாரணத்தொகையை மீனவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப உயர்த்தி கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போது தான் மீனவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். மேலும் மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களின் கோரிக்கையான இயந்திரப் படகுகள் மூலமும் மீன்பிடிக்க தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக மீன்பிடித்தடைக்காலத்தில் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உள்கட்டமைப்புடன் கூடிய துறைமுக வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும். இக்காலத்தில் மீனவர்களின் படகுகள், வலைகள் போன்றவற்றை பராமரிக்க தமிழக அரசே பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். மீன்டித்தடைக்காலத்திலேயே மீனவர்களுக்கான நிவாரணத்தொகையை வழங்கிட வேண்டும்.

எனவே மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் சிரமமின்றி தொடர வேண்டுமென்றால் மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்குவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்’’ என ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

Leave a comment