காஷ்மீரில் வீடுகளில் கழிவறை கட்டாத 616 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்திவைப்பு

398 0

காஷ்மீர் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை கட்டாததால் 616 அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து காஷ்மீர் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை கட்டாததால் 616 அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து காஷ்மீர் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணும் வகையில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு கழிப்பிட வசதிகளை மேம்படுத்தி சுகாதாரத்தை பேணுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை கட்டாததால் 616 அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து காஷ்மீர் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட வளர்ச்சி அதிகாரி, இதை கண்காணிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் வீடுகளில் கண்டிப்பாக கழிவறை கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கணக்கெடுப்பு அனைத்து மாவட்டத்திலும் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 71.95 சதவீதம் வீடுகளில் கழிவறை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கழிவறை இல்லாதவர்கள் வீட்டில் கண்டிப்பாக கழிவறை அமைக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், கிஸ்துவார் மாவட்டத்தில் 616 அரசு ஊழியர்கள் வீட்டில் இதுவரை கழிவறை அமைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து கிஸ்துவார் மாவட்ட வளர்ச்சி அதிகாரி அங்ரெஸ் சிங் ராணா நேற்று 616 அரசு ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். கிஸ்துவார் மாவட்டத்தில் 57.23 சதவீதம் வீடுகளில்தான் கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் லே, கார்கில், லடாக், சோபியான், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகள் 100 சதவீதம் கழிவறை கொண்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக இவை உள்ளன. புல்வாமா மாவட்டத்தில் 98.64%, அனந்தநாக் 98.43%, குப்வாரா 91.92%, ரஜோரி மாவட்டத்தில் 84.53% வீடுகளில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. உதம்பூர் (48.41%), கத்துவா (45.69%) வீடுகளில் மட்டுமே கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment