சிரியா போராளிகள் குழுவின் முக்கிய தளபதி விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்

308 0

201609091014230669_commander-of-syrian-rebel-alliance-abu-omar-sarakeb-killed_secvpfசிரியாவில் அதிபர் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராளிக் குழுவின் முக்கிய தளபதி விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட சுமார் 3 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிரியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டில் உள்ள பல்வேறு போராளி குழுக்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஒசாமா பின்லேடன் உயிருடன் இருந்தபோது அவனது தலைமையிலான தீவிரவாத இயக்கமான அல் கொய்தா அமைப்பின் ஆதரவை பெற்றிருந்த அல்-நுஸ்ரா முன்னணி என்ற போராளி குழுவும் இவற்றில் ஒன்றாகும்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பதே அல்-ஷாம் முன்னணி என பெயரை மாற்றிக்கொண்ட இந்த போராளிக் குழு சிரியாவில் உள்ள சக்திவாய்ந்த போராளிக் குழுவாக கருதப்படுகிறது. அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணத்தை கைப்பற்றி வைத்திருந்த இந்த குழுவின் முக்கிய போர்ப்படை தளபதிகளில் ஒருவரான அபு ஒமர் சராகெப் என்பவர் இன்று விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலெப்போ மாகாணத்தில் பதே அல்-ஷாம் முன்னணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தின்போது அமெரிக்க, ரஷியா அல்லது சிரியா நாட்டு விமானப்படை நடத்திய தாக்குதலில் ஒமர் சராகெப் மற்றும் இன்னொரு தளபதியான அபு முஸ்லெம் அல்-ஷாமி ஆகியோர் வீரமரணம் அடைந்ததாக அந்த டுவிட்டர் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.