சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்த டூமா நகரில் இன்று சர்வதேச நிபுணர்கள் ஆய்வு

239 0

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட டூமா நகரில் இன்று (புதன்கிழமை) சர்வதேச நிபுணர்கள் ஆய்வு நடத்துகின்றனர்.

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட டூமா நகரில் இன்று (புதன்கிழமை) சர்வதேச நிபுணர்கள் ஆய்வு நடத்துகின்றனர். இதற்கு சிரியாவும், அதன் நட்பு நாடான ரஷியாவும் ஒப்புதல் அளித்து உள்ளன.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப்போரில், அதிபர் பஷார் அல் ஆசாத் அரசின் படையினர், தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு சர்வதேச அளவில் எழுந்து உள்ளது.

இந்த நிலையில், அங்கு கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள கடைசி நகரமான டூமாவில் கடந்த 7-ந்தேதி ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி விட்டது.

இந்த ரசாயன ஆயுத தாக்குதலுக்கு சிரியாவில் உள்ள பஷார் அல் ஆசாத் அரசும், ரஷியாவும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் அவ்விரு நாடுகளும் இதை ஏற்க மறுத்தன. அத்துடன் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியது நாடகம் என அவை கருத்து தெரிவித்தன.ஆனால் சிரியாவில் நடந்த ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டின் மீது கடந்த 14-ந்தேதி அமெரிக்க கூட்டுப்படைகள் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தின. இந்த தாக்குதலில், அங்கு அமைந்து இருந்த ரசாயன ஆயுத உற்பத்தி மையமும், ரசாயன ஆயுத கிடங்கும், ரசாயன ஆயுத பதுங்கு குழியும் நிர்மூலம் ஆக்கப்பட்டன.

இதற்கு இடையே சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்த டூமா நகரில் ஆய்வு நடத்துவதற்காக ஓ.பி.சி.டபிள்யு என்னும் சர்வதேச ரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பின் நிபுணர்கள், டமாஸ்கஸ் நகருக்கு கடந்த 14-ந்தேதி சென்று அடைந்தனர். டமாஸ்கஸ் நகருக்கு சென்று அடைந்த அவர்கள் டூமா நகருக்கு செல்வதற்கு, ரஷியாவும், சிரியாவும் அனுமதி அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகின.இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சர்வதேச ரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பின் நிபுணர்கள், டூமா நகரில் ஆய்வு நடத்துவதற்கு சிரியாவும், ரஷியாவும் இப்போது ஒப்புதல் அளித்து உள்ளன.

இதையடுத்து அங்கு இன்று (புதன்கிழமை) அவர்கள் சென்று, ஆய்வு நடத்துகிறார்கள். ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெற்று 11 நாட்கள் ஆன நிலையில் அங்கு செல்கிற நிபுணர்கள், அங்கு இருந்து மண் உள்ளிட்ட பல்வேறு தடயங்களை சேகரிக்கிறார்கள்.

அவற்றை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்துகிறபோது, அவற்றில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்ததற்கு ஆதாரம் உள்ளதா என தெரிய வரும்.

அதே நேரத்தில் நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்த சர்வதேச ரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் பேசிய அமெரிக்க தூதர் கென்னத் வார்டு, ரசாயன ஆயுத தாக்குதல் நடந்த இடத்தில் ரஷிய படையினர் தடயங்களை அழித்து விட்டதாக அஞ்சுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அவர் பேசும்போது, “சம்பவ இடத்துக்கு ரஷிய படையினர் சென்று இருப்பார்கள் என்று புரிந்து கொள்கிறோம். சர்வதேச ரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினரின் முயற்சிகளை முறியடிக்கிற விதத்தில், ரஷிய படையினர் ஆதாரங்களை அழித்திருப்பார்கள் என்பது எங்களின் கவலையாக அமைந்து உள்ளது” என குறிப்பிட்டார்.

ஆனால் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் ரலாவ்ரோவ், இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ளார். அவர், “அங்கு ஆதாரங்களை ரஷியா அழிக்கவில்லை என்று என்னால் உறுதிபடக்கூற முடியும்” என குறிப்பிட்டார்.

இத்தனைக்கும் மத்தியில் ஹோம்ஸ் நகரத்தின் மேற்கு பகுதியில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதற்கு சிரியா வான் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை அமெரிக்காவும், இஸ்ரேலும் மறுத்து உள்ளன.

Leave a comment