ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் போராட்டம் நடத்திய போது மக்கள் ஆதரவு தரவில்லை – பொன்.ராதாகிருஷ்ணன்

311 0

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் போராட்டம் நடத்திய போது மக்கள் ஆதரவு தரவில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி துறைமுக சபையின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டமும் நடந்து விடாதபடி சதி செயல்கள் நடந்து வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது. இதுபோல கன்னியாகுமரியிலும் வளர்ச்சி பணிகள் நடக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குருஸ் பர்னாந்து சிலை அருகே பி.ஜே.பி. சார்பாக 4 நாள் உண்ணாவிரதம் இருந்து முதலில் போராடியவன் நான். அப்போது எனக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறி விட்டனர்.

ஆனால் இப்போது பாதிப்பு என்றதும் அதே மக்கள் போராடுகின்றனர். அந்த ஆலை செயல்படுவது குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கியது அ.தி.மு.க., தி.மு.க.

நான் உண்ணாவிரதம் இருந்த போது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என்னிடம் பேரம் பேசியது. அதற்கு நான் உடன்படவில்லை. பின்னர் 1998 பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் செலவுக்கு பணம் அளிக்க முன்வந்தனர். அதனையும் நான் நிராகரித்து திருப்பி அனுப்பினேன். இதுபோல கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும் தொடக்கத்தில் நான் போராடினேன். ஆனால் பல கோடி பணம் செலவழித்துவிட்ட பின்னர் நிறுத்த முடியாது. திட்டம் வேண்டும் என்று அப்போது கூறி விட்டனர்.

எனவே எந்த திட்டத்தையும் மக்கள் ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள் தி.மு.க., காங்கிரஸ்.

இயக்குனர் பாரதி ராஜா தேசியவாதி, தமிழ் உணர்வாளர் அவரும் பிற சினிமா துறையினரும் சரியான புரிதல் இல்லாததால், மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஊடகத்தை மிஞ்சி, சமூக வலைத்தளங்கள் உள்ளது. அதில் வதந்தியே அதிகம் உள்ளது.

இன்று காவல்துறையினரை அடித்தால் என்ன, பத்திரிகையாளர்களை அடித்தால் என்ன என்று கேட்கும் தலைவர் என கூறுபவர்கள் வந்து விட்டனர். இது சமூக நலனுக்கு கேடு விளைவிக்கும் தீய சக்திகள். வளர்ச்சி திட்டங்களை தடுக்கின்றனர். அவர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதால் அவர்கள் பிரதமர் மற்றும் பா.ஜ.க.வினருக்கு எதிராக தனி நபர் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.

இவர்களால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படுவதை மக்களும், அரசும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.பேட்டியின் போது துறைமுக சபை உறுப்பினர் ராஜ கண்ணன், மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாலாஜி, பொதுச்செயலாளர் சிவ ராமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a comment