தேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஹங்கேரியில் 1 லட்சம் பேர் போராட்டம்

227 0

ஹங்கேரி நாட்டில் பிரதமர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி 1 லட்சம் பேர் பேரணியில் ஈடுபட்டு பின்னர் பாராளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஹங்கேரியில் கடந்த வாரம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் விக்டர் ஆர்பன் கட்சி மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது. எனவே, விக்டர் ஆர்பின் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார்.

அவர் பதவி ஏற்ற 6 நாட்களுக்கு பிறகு தேர்தலில் அவர் பெற்ற வெற்றியை எதிர்த்து பொதுமக்கள் நேற்று பேரணி நடத்தினார்கள். தலைநகர் புடாபெஸ்டில் பேஸ்புக் குழுவினர் நடத்திய இப்பேரணியில் 1 லட்சம் பேர் திரண்டனர். பின்னர் பாராளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் ஹங்கேரியின் தேசிய கொடியையும், ஐரோப்பிய யூனியனின் கொடியையும் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர்.

தேர்தலில் முறைகேடு செய்து பிரதமர் விக்டர் ஆர்பன் வெற்றிபெற்று விட்டார். எனவே அனைத்து வாக்குகளையும் மறுபடியும் எண்ண வேண்டும். புதிய தேர்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இதுபோன்ற போராட்டம் அடுத்த வாரமும் நடைபெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் குறித்து பிரதமர் ஆர்பனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என தெரிவித்து விட்டார். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர்.

Leave a comment