காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ச.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தீக்குளிக்க முயன்ற தொண்டரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் சேவியர், செங்குளம் கணேசன், தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர்கள் ராஜன், சிங்கம்பாண்டி, துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார் பட்டியை சேர்ந்த தொண்டர் காமராஜ் செல்லையா (வயது40) என்பவர் கோஷம் எழுப்பியவாறு நடுரோட்டிற்கு வந்து தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக போலீசார் விரைந்து வந்து அவரை தடுத்தனர்.

மேலும் அங்குள்ள தொண்டர்களும் அவர் மீது தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வந்து தீக்குளிக்க முயன்ற காமராஜ் செல்லையாவை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் தொகுதி செயலாளர்கள் ஸ்ரீதர்ராஜன், ராகவன் மற்றும் நிர்வாகிகள் ரவிக்குமார், அழகேச ராஜா, சரத் ஆனந்த், ரமேஷ், ஜார்ஜ், சின்னத்துரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

