காவிரி நீர் பிரச்சினையில் ஜெயலலிதா இருந்தால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்குமா? என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், திருச்சி முக்கொம்பு பகுதியில் இருந்து ‘காவிரி உரிமை மீட்பு பயணத்தை’ நேற்று தொடங்கினார்.
இந்த மீட்பு பயணம் நேற்று இரவு தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையை வந்தடைந்தது. கல்லணையில் ஆற்றின் நடுவில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காவிரி நீர், டெல்டா பகுதி பாசனத்திற்கு மட்டும் அல்ல. பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையையும் தீர்த்து வைக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட பகுதி. தண்ணீருக்காக அல்லல்படும் மாவட்டம்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, முதல்-அமைச்சராக இருந்தபோது ரூ.616 கோடி செலவில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார்.
அதுபோல் தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார்.
வேலூர் மாவட்டத்தின் குடிநீருக்காக ரூ.1500 கோடியில் திட்டத்தை நிறைவேற்றினார். இப்படி பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையை காவிரி நீர் பூர்த்தி செய்து வருகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காவிரிக்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது. இதுதான் இறுதி தீர்ப்பு என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த தீர்ப்பை நிறைவேற்றக்கூடிய பிரதமர் மோடி, அதை நிறைவேற்ற முன்வரவில்லை. மத்திய மந்திரி நிதின்கட்காரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியம் அல்ல என்று விமர்சனம் செய்கிறார்.

தமிழகத்தில் முதுகெலும்பு இல்லாத அரசு நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்சியாளர்கள், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள்.
அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் முதல்-அமைச்சராக இருந்து இருந்தால் பிரதமர் மோடி, தமிழக அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி இருப்பார்.
ஜெயலலிதா சர்வாதிகாரியாக இருந்தாலும் அவரை கண்டு மத்திய அரசு பயந்து கொண்டு தான் இருந்தது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்திருந்தால் மத்திய அரசு காவிரி பிரச்சினையில் இப்படிப்பட்ட முடிவு எடுத்து இருக்குமா?
சுப்ரீம் கோர்ட்டு 6 வார காலம் அவகாசம் கொடுத்தும் அந்த கால அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ‘ஸ்கீம்’ குறித்து விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது.
இதற்கு முக்கொம்பில் பேசிய கி.வீரமணி சொல்லியது போல் டிக்ஸ்னரியை எடுத்து பார்த்திருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
எடப்பாடி தலைமையிலான அரசு, இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்களுக்கு துதிபாடிக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் நடக்கும் ஆட்சியை தூக்கி எறியவும், மத்தியில் உள்ள பாரதிய ஜனதா ஆட்சிக்கு நல்ல பாடத்தை புகட்டவும் மக்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்காகத்தான் காவிரி உரிமை மீட்பு பயணத்திற்கு வழியெங்கும் மக்கள் பேராதரவு தருகிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

