மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கை பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!!

246 0

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கை பெண்களை கட்டாயமாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இந்த வலியுறுத்தலை விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களை மேற்கோள்காட்டி ”கார்டியன்” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ளக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களை இலக்கு வைக்கும் முகவர்கள் அவர்களை கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

தாம் அனுப்பும் பணிப்பெண்கள் மூன்று மாத காலத்துக்கு கர்ப்பம் தரிக்கமாட்டார் என்ற உத்தரவாதத்தை வழங்குவதாக இலங்கை வேலைவாய்பபு பணியகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட ஆறு முகவர் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்குக்கு தொழிலுக்காக பெண்ணொருவரை அனுப்புவதற்கு முன்னர் அரசாங்கம் மருத்துவ பரிசோதனையொன்றை நடத்தும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன் முடிவுகளில் யாரும் தலையிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, மூன்று மாத காலத்துக்குக் கருத்தரிப்பதை தடுக்கக்கூடிய டெப்போ புரோவரா என்ற ஊசியை பல முகவர் நிறுவனங்கள் பயன்படுத்துவது கார்டியனின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

Leave a comment