காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து

256 0

காமன்வெல்த் போட்டியில் தங்கம்வென்ற தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில்,  ஆடவருக்கான (77 கிலோ எடைப்பிரிவு) பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தங்கம் வென்ற சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். “காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் மூன்றாம் நாளில் பளுதூக்கும் வீரர்கள் நம்மை பெருமைப்படுத்தி உள்ளனர். ஆடவர் 77 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு வாழ்த்துக்கள்’ என ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறியுள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 5 பதக்கங்களும் பளுதூக்குதல் பிரிவில் கிடைத்துள்ளது. 14 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. 23 பதக்கங்களுடன் (12 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம்) இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

Leave a comment