காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் த.மா.கா. உண்ணாவிரதம்

612 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி த.மா.கா. சார்பில் திருச்சியில் இன்று காலை ஜி.கே.வாசன் தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

கடந்த 3-ந்தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பும், 4-ந்தேதி விவசாய சங்கம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச் சியில் விமான நிலைய முற்றுகை போராட்டமும், நேற்று தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு, ரெயில், பஸ் மறியல் போராட்டம் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்ட விவசாயிகளை காக்கவும், 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையிலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கவும் வலியுறுத்தி திருச்சியில் த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

அதன்படி தஞ்சாவூரில் கையெழுத்து இயக்கத்தை நேற்று ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திய த.மா.கா.வினர் அதனை பிரதமருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் த.மா.கா. சார்பில் காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் போடப்பட்டு இருந்தது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பி. ஆர்.பாண்டியன், த.மா.கா. மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன், த.மா.கா. மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் டெல்டா மாவட்ட தலைவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a comment