போடியில் இருந்து அம்பரப்பர் மலையை நோக்கி நடைபயணம் தொடங்கினார் வைகோ

459 0

போடியில் இருந்து 6-வது நாளாக இன்று தனது நடைபயணத்தை மேற்கொண்ட வைகோவிற்கு மலை கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிபுரம் பகுதியில் அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் இருந்து ஏராளமானோர் கடந்த 31-ந் தேதி முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள அவர் நேற்று முன்தினம் 5-வது நாள் பயணமாக தேனியில் இருந்து தொடங்கி பழனிசெட்டிபட்டி, முத்துதேவன்பட்டி, சடையன்பட்டி, காமராஜபுரம், பத்ரகாளிபுரம், விசுவாசபுரம், மீனாட்சிபரம், மேலசொக்கநாதபுரம் வழியாக போடியை அடைந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

நேற்று தனது தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதால் தனது நடைபயணத்தை ஒத்தி வைத்து மவுன விரதத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை போடியில் தனது நடைபயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் தேவாரம் பிரதான சாலை, ரங்கநாதபுரம், தருமத்துப்பட்டி, சில்ல மரத்துப்பட்டி, சிலமலை வழியாக சென்றார்.

வைகோவிற்கு மலை கிராம மக்கள் கைகுலுக்கி உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர். இன்று இரவு டி.புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வைகோ அதன் பின்பு அங்கேயே தங்குகிறார். டி.புதுக்கோட்டை அருகே தான் பொட்டிபுரம் கிராமம் அமைந்துள்ளது.

எனவே பொட்டிபுரத்துக்கு சென்று அம்பரப்பர் மலையை பார்வையிடுவார் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏற்கனவே அங்கு போலீசார் வேலி அமைத்து பாதுகாப்பு அமைத்துள்ள நிலையில் வைகோவின் வருகையால் இன்று கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a comment