தமிழர்களின் தலைமையை தக்க வைக்குமா தமிழரசு.? காரை துர்க்கா

25933 0

இலங்கைத் தீவில் 1983 ஆடி மாத துயர் படிந்த தமிழ் சிங்கள இனக் கலவரத்திற்கு பின் இனப் பிரச்சனை பல புதிய வடிவங்களைக் கண்டது. அந்த வகையில் தாய் நாட்டை விட்டு புலம்பெயர்தல் ஈழத் தமிழர் வாழ்வில் தற்போது கணணியில் தொற்றும் வைரஸ் போலவே தொற்றிக் கொண்டது எனலாம்.

ஜரோப்பிய நாடுகள் கனடா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு பெருமளவில் படை எடுத்தனர். அந்நாட்களில் பரவலாக கதைக்கப்பட்ட ஒரு சிறிய கதை. ஆனால் பெரிய தத்துவம் அதன் பின்னால் ஒழிந்து உள்ளது. தற்போதும் நமக்கு பொருத்தப்பாடாக உள்ளது.

அக் காலப் பகுதியில் கணிசமான பிற தேசத்து அகதிகள் கனடாவை நோக்கி படை எடுப்பது உண்டு. ஆகவே கனடா நாட்டு அரசாங்கம் நாடுகளின் அடிப்படையிலேயே அப்படி வருவோரை அடைக்க சிறைச்சாலைகளை அமைக்குமாம். ஏனைய நாட்டு அகதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலை பெரிய பூட்டுகள் பல பயன்படுத்தி பூட்டப்பட்டிருக்குமாம்.
ஆனால் நம் ஈழத் தமிழர் அடைக்கப்பட்டிருக்கும் சிசை;சாலைக்கு கதவே இல்லையாம். ஏனெனில் ஒரு தமிழர் வெளியே தப்பி செல்ல முற்பட்டால் இன்னொரு தமிழர் சிறை அதிகாரிகளுக்கு உடனடியாகவே காட்டிக் கொடுத்து விடுவாராம். அதாவது நன்பர் தப்புவதை தடுத்து விடுவார்.

ஆகா ஒற்றுமை இன்மையை எவ்வளவு தெளிவாக படம் போட்டுக் காட்டுகின்றது இந்தக் கதை. ஆனாலும் அந்த ஒற்றுமை முள்ளிவாய்க்கால் கொடுமையான மனித குலத்திற்கு நேரிடக் கூடாத பேரவலத்திற்கு பின்னரும் ஏற்படவில்லை என்பது பெரும் துயரிலும் துயரம்.
ஈழத் தமிழர் விடுதலை போராட்டத்தை அ ஆ இ எனக் கூறலாம். அகிம்சை போராட்டம் (அ) ஆயுதப் போராட்டம் (ஆ) இராஜதந்திரம் (இ) என வியாக்கியானம் கூறலாம். அந்த வியாக்கியானம் முற்றிலும் சரியானதே. அப்படி எனின் கடந்த ஒன்பது வருடங்களில் ஈழத்தமிழர் விடிவிற்காக தமிழத் தலைமை தலைமைகள் எவ்வாறான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டது. அதன் சாதக விளைவுகள் என்ன? நீட்சி என்ன?

உண்மையில் ஒரு வினைத்திறன் கொண்ட தலைமை தனது மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது விடுதலையை நோக்கி மக்களை நம்பிக்கையுடன் நகர்த்த வேண்டும். அதாவது விடுதலையின் பொருட்டு சிறந்த விடயங்களை மக்கள் செய்ய முயற்சிகளை வழ்ங்கும் ஏற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும்.
ஈழத் தமிழ் மக்கள் 2009 மே 18 ம் திகதியுடன் எல்லாமே முடிந்து விட்டது என்ற சோகம் கவலை வெறுப்பு ஆகியவற்றுடன் எதிர் காலம் பற்றிய நம்பிக்கை இழந்து இருக்க கூடாது இருக்கவும் முடியாது.

ஆயுத போராட்ட வழி வலிகள் நிறைந்தது. அது தமிழ் இனத்துக்கு பல்வேறு படிப்பினைகளை வழங்கி விட்டு சென்று விட்டது. விடுதலை என்பது கரடுமுரடான முட்கள் நிறைந்த பாதை. ஆகவே நீண்ட வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட தனித்துவமான இனம் மீண்டும் மீண்டும் வழுக்கி விழக் கூடாது.
ஆகவே தமிழ் மக்களுக்கு தமது வருங்காலம் பற்றிய நம்பிக்கை ஒளிக் கீற்றுகள் வரும்படியாக தமிழத் தலைமை செயற்படவில்லை என தமிழ் மக்கள் ஆறாத் துயரில் உள்ளனர்.
உள்ளுராட்சிக் மன்றத் தேர்தலுக்கு முற்பட்ட காலங்களில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே நடைபெற்று வந்த கருத்தாடல்கள் கருத்தாழம் மிக்கதாகவும் ஆக்கபூர்வமாகவும் இல்லாமல் ஒற்றமையை வெட்டிப் புதைப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. பனிப்போர் நிலவுவது போலவே நிலைமைகள் உள்ளது. அவர்களுக்கு வாக்குகளை அள்ளி அளித்தோருக்கு அளித்த வாக்குறியை அழித்து செயற்படுவதாக உள்ளது.

ஒரு துடுப்பாட்ட (கிரிக்கெட்) அணியில் இருவர் சிறப்பாக ஆடுவதாக வைத்துக் கொள்வோம். ஆகையால் அவர்கள் வெற்றிக்கு வழி சமைக்கலாம். மாறாக அவர்கள் இருவருமே தனித்து அணியாக முடியாது. ஆகவே அங்கு மற்றவர்களது கருத்து ஆலோசனை எல்லாமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒரு சராசரி விளையாட்டிலேயே நிலைமை இவ்வாறிருக்க பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் ஒட்டுமொத்த தலைவிதியை தீர்மாணிக்கப் போகும் விடையங்களை கையாளுகையில் ஒரு சிலர் முடிவுகளை மேற்கொள்வது சிறப்பானதும் அல்ல விவேகமானதும் அல்ல. ஜனநாயகப் பண்பும் அல்ல.

அதனை விடுத்து ஒற்றை வரியில் கூறினால் எதேச்சையான அதிகாரப் போக்கு மட்டுமே எனலாம். அதுவே கூட்டமைப்பு (கூட்டு அமைப்பு) என்று சொல்லப்படுகின்ற தமிழரசுக் கட்சியால் கொண்டு நடாத்தப்படும் அணியில் நடைபெற்று வருகின்றது.
இலக்கை அடையும் வரை ஒற்றுமையாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டியவர்கள் மத்தியில் இடைவெளிகளையும் சந்தேகங்களையும் இட்டு விட்டது. இவை யாவற்றையும் தடுக்க தலைமை தவறி விட்டதோ என்ற சந்தேகம் தமிழர் மனதில் இருப்பு கொண்டு விட்டது.

இலங்;கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை திருப்பிபடுத்துவதை விடுத்து எப்படியேனும் ஜ நா சபையை திருப்திபடுத்தவே பெரும் பாடுபடுகின்றது. இந்நிலையில் கூட்டமைப்புத் தலைமை தமது மக்களை திருப்திப்படுத்தாமல் இலங்கை அரசை திருப்தி படுத்துவதாகவே கள நிலவரம் உள்ளது.
தமிழத்; தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 17 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. ஆனால் அது சட்ட ரீதியாக தனியான கட்சியாக பதிவு செய்யப்படவில்லை. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் பதிவை மேற்கொள்ளுமாறு பலமுறை கோரியும் தமிழரசுக் கட்சி பின்னடித்து வருகின்றது.

தனியான கட்சியாக வருமிடத்து அதற்கென தனியாக பதவி நிலைகள் வரும். அவ்வாறான ஒரு பொதுவான நிலை ஒரு நிலைப்பாடு இன்மையால் அன்று முதல் இன்று வரை தமிழரசுக் கட்சியின் ஆதிக்கமே அமோகமாக உள்ளது. ஆனால் அதனது அரசியல் அறுவடைகள் ஆரோக்கியமாக இல்லை.
ஆகவே இவ்விடயத்தில் தலைமை எனப்படுவோருக்கு பொறுப்பு கூறல் உள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு போர்க் குற்றங்களில் பொறுப்புக் கூறல் உள்ளது. அது போலவே கூட்டபை;புத் தலைமைக்கும் தமிழ் மக்களது நலனில் பொறுப்புக் கூறல் உள்ளது. எந்த நாளுமே சாக்குப் போக்கும் தட்டிக் கழித்தலும் செய்ய முடியாது.

அண்மைய உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இவர்களது பொறுப்பற்ற செயற்பாட்டால் முழுமையான வெற்றி பெற முடியாத நிலை தோன்றியது. தொங்கு சபைகளைப் பரிசாகப் பெற்றனர். அவ்வாறான தொங்கு சபைகளை நிவர்த்தி செய்ய தூக்கி எழுப்ப இவர்களால் ஒட்டுக்குழு எனவும் தீண்டத்தகாதவர்கள் எனவும் விலக்கி வைத்தவர்களை அணைத்தையும் மறந்து அணைத்துக் கொண்டு உள்ளனர்.

அடுத்து இந்த நாட்டின் இனப் பிரச்சினைக்கான விதையை விதைத்து அதனை வளர்த்து பெரு விருட்சமாக்கிய நாட்டின் தென்பகுதி இனவாதக் சிங்களக் கட்சிகளுடன் உறவு கொண்டாடி கூட்டு வைத்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்து வெற்றி பெற்று உள்ளார்கள். இவ்வாறான அற்பத்தனமான வெற்றியைக் காட்டிலும் உன்னதமான தோல்வி மேலானது.
தந்தை செல்வா அவர்களால் உயர் லட்சியத்துக்காக உருவாக்கப்பபட்ட உயர்ந்த தமிழரசு என்ற நாமத்தை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டார்கள். வெறும் உள்ளுராட்சி சபை தவிசாளர் பதவிகளுக்காக யாருடனும் கூட்டுச் சேருவோம் என அகிலத்துக்கு அறிவித்து விடடார்கள். இவர்களது இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் மக்கள் அருவருப்பு அடைந்து உள்ளனர். இவர்களா எமது மீட்பர்கள் (?) இவர்கள் எம்மை மீட்பார்களா? என ஆழ் சிந்தனையில் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சிங்களக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் எனின் அதே சிங்களக் கட்சியுடன் இணைந்து ஏன் கொழும்பில் அமைச்சுப் பதவிகளைப் பெற முடியாது.
ஒருவர் அல்லது ஒரு அமைப்பின் வீழ்ச்சி இன்னொருவர் அல்லது இன்னொரு அமைப்புக்கு எழுச்சியாக அமைகின்றது. இது பொதுவானது. அதுவே உலக நியதியும் கூட.
உதாரணமாக 1956 ல் அப்போதைய பிரதமர் ளுறுசுனு பண்டாரநாயக்காவின் மறைவு உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையில் தோற்றம் பெற வழி வகுத்தது.
1993ல் அப்போதை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசஅவர்களின் மரணம் டி பி விஜேயதுங்கவை ஜனாதிபதி ஆக்கியது.

அதே போலவே 2009ல் ஆயதப் போராட்டத்தின் மௌனம் சம்பந்தன் அவர்களை தமிழ் மக்களின் தலைவர் என ஆக்கியது. பெரும் பொறுப்புக்களை வழங்கியது. ஆனால் அரசியலில் பல தசாப்த பட்டறிவு கொண்ட அவர் செயலில் காட்டத் தவறி விட்டார் போலவே அண்மைப் போக்குகள் கட்டியம் கூறுகின்றது.

கடவுள் தான் ஈழத்துத் தமிழ் மக்களை………….

காரை துர்க்கா

Leave a comment