மாம்பழத்துக்காக உலகை சுற்றி வலம் வரும் பிள்ளையார்கள்.- காரை துர்க்கா

13709 0

சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவார். அவருக்கு பிள்ளையார் மற்றும் முருகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். சிவபெருமானிடம் மாம்பழம் ஒன்று இருந்தது. அதை யாருக்குக் கொடுப்பது என யோசித்தார். உலகை சுற்றி முதலில் வருபவருக்கு அதைக் கொடுப்பது என முடிவு எட்டப்பட்டது. முருகன் மயில் மீது ஏறி உலகை சுற்றி வரப் புறப்பட்டார். ஆனால் பிள்ளையார் தந்தையும் தாயுமே உலகம் என அவர்களைச் சுற்றினார். மாங்கனியைப் பெற்றுக் கொண்டார். இக் கதை தரம் ஒன்று வைவநெறி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அது போன்றே உலகப் படத்திலே உருவத்தில் மாம்பழம் போல காட்சி அளிக்கும் குட்டித் தீவான சிறிலங்காவில் உள்ள அரசியல்வாதிகள் தீவின் உள்ளே தீர்வு இருக்க வெளி உலகைச் சுற்றி தீர்வுக்காக (?) வலம் வருகின்றனர் அல்லது அவ்வாறான நிர்ப்பந்தத்தில் உள்ளனர் அல்லது உலகை ஏமாற்றுகின்றனர். சிறிலங்காவில் தற்போது உள்ள அ விலிருந்து ஃவரையிலான அதைத்துப் பிரச்சனைக்கும் காரணம் தீராத இனப்பிணக்கு ஆகும். இதுவே நாட்டை ஆட்டிப் படைக்கும் பல தசாப்த காலமாக கூடவே தொற்றி வரும் மிகப் பெரும் தொற்று நோய் ஆகும்.
இந்த நோய்க்கு வைத்தியம் கண்டு பிடிக்கப்படின் ஏனைய பக்க நோய்கள் தானாகவே கலையும் விலகும். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் ஆட்சியாளர்களும் அவர்களுடைய பெரும்பான்மை மக்களுக்கும் இல்லாமையால் நாட்டில் அமைதியும் இல்லாமல் போய் விட்டது.

ஒரு உயிரைக் கொன்று சமாதானத்தை ஏற்படுத்தினால் கூட அது உண்மையில் நியாயமான நீதியான சமாதானம் ஆகாது. ஆனால் இலங்கைத் தீவில் பல ஆயிரம் உயிர்களைக் பலியாக்கி சமாதானத்துக்கான போர் (?) எனப் பிரகடனப்படுத்திய ஆயுத யுத்தம் 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அவ்வாறான போர் நாட்டில் நீடித்த அமைதி மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறி விட்டது. அந்தப் போரில் ஏதோ ஒரு விதத்தில் வெற்றி பெற்றோர் அமைதி சமாதானம் ஏற்படுத்தப்படும் என்றவாறாக உலகப் பொது மன்றமான ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகள் உறுதியற்ற வெற்று வாக்குறுதிகள் என பல வருடங்களாகக் கிடப்பில் உள்ளது.

குற்றம் இழைத்தவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் உள்ளுரில் மாதாந்தம் அல்லது ஏதோ கால ஒழுங்கில் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு விசாரனையில் கலந்து விட்டு வருவது உண்டு. அதே போல நம் நாட்டு ஆட்சியாளர்கள் வருடாந்தம் பங்குனி மாதம் nஐனீவா சென்று தாங்கள் முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவு செய்வோம் அல்லது அவற்றை நிறைவேற்ற கால அவகாசம் போதாது என பல சாக்குப்போக்குகளைக் கூறி வருவது வழமையான நிகழ்வு என ஆகி விட்டது.

உண்மையில் இவர்கள் இதற்காக வருடாந்தம் ஜெனிவா செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் தம் உறவுகளைத் தேடி ஒரு வருடத்துக்கு மேலாக வீதியில் இருக்கும் அவர் தம் உறவுகளைத் தேடிச் சென்றதாகத் தெரியவில்லை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவர்கள் தெருவில் அலைய வேண்டும் என ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பபட்டோர் அலுவலகம் கூட உலகை ஏமாற்றும் கண் துடைப்பு நாடகம் என்பதை அனைவருமே அறிவர்.

நாட்டில் இன்னமும் தங்கள் சொந்த இடங்கிளில் மீளக் குடியமர முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். தமிழ் இளைஞர்கள் இன்னமும் சிறை வாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது. அடுத்த வருடம் (2019) அது அமுலுக்கு வந்து நாற்பது வருடங்கள் ஆகின்றது.அடுத்து தொடர் துன்பங்களும் விரக்தியும் தாங்காது தாய் மரணித்து விட்டார். தந்தை ஒரு அரசியல்க் கைதி. மரணச்சடங்கில் பங்கேற்று விட்டு மீண்டும் சிறை செல்லும் தந்தையுடன் கூடவே சிறை செல்லத் தயாரான நிலையில் மகள் உள்ளார்.

அரசியலமைப்பு மாற்றம் ஊடாக அரசியல் தீர்வு வருவது கூட கானல் நீராகி விட்டது. மொத்தத்தில் எதுவுமே உருப்படியாக இல்லாத நிலையில் இல்லை இல்லை இல்லை என்பதே தமிழ் மக்களுக்கு இனாமாக வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறான நிலையில் nஐனீவாவில் வருடாந்தம் கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டியது நியதி என்றாகி விட்டது.
மக்களால் மக்களுக்கான ஆட்சியே ஐனநாயம் என கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறாக நம் நாட்டில் அமையப் போகும் ஆட்சியைக் கூட அந்நிய நாடுகளே தீர்மானிக்கக் கூடிய நிலைமைகள் நம் நாட்டில் தொடர்கின்றது. உதாரணமாக கடந்த 2015 ஐனவரியில் ஆட்சி மாற்றம் கூட மேலத்தேய நாடுகளின் தலையீட்டினாலேயே கொண்டு வரப்பட்டமை உலகறிந்த உண்மை ஆகும்.

நம் நாட்டில் வளர்ந்து வியாபித்து இருக்கும் இனவாதப் பூதமே வேற்று நாட்டவர் இங்கு தலை இடவும் நாம் அவர்களிடம் தலை குனியவும் பிரதான காரணம் ஆகும். இனப்பிணக்கே அவர்கள் நம் வழியில் குறுக்கு இட்டு வரவும் குத்துக்கரணம் அடிக்கவும் வழி கோலியது. இனப்பிணக்கை மையமாகக் கொண்டே 1980 களில் இந்தியா இலங்கையின் உள் விவகாரத்தில் நேரடியாகக் களம் இறங்கியது. தமிழ் மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறி இலங்கை வான் பரப்பினுள் அத்துமீறி நுழைந்து உணவுப் பொதிகளை வீசியது.

இலங்கை இந்திய ஒப்பந்தமும் (1987) இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் அன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் விருப்பம் இன்றியே அந்த உடன்பாட்டுக்குக் கூட உடன்பட்டார்கள்.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவை புறம் ஒதுக்கித் தான் நுழைய சீனாவுக்கு நம் நாட்டு இனப்பிணக்கே வழி சமைத்தது. அதனுடன் பாகிஸ்தானும் கூடவே நுழைந்தது. இப்பொழுது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்த சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க ஐப்பானிடம் சரணடைய வேண்டிய இக்கட்டான நிலவரம்.

அடுத்து இதனால் ஐப்பானின் தலையீடு அதிகரிக்க மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் அவர்கள் இங்கு வருவது (நுழைவது) எங்களுக்காக இல்லை. மாறாக அவர்களது அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ நலன் மட்டும் கருதி மட்டுமே என்பது பரகசியம் ஆகும். அடுத்து நம் நாட்டு பொருளாதார மேம்பாடு கருதி அந்நியச் செலாவனியை அதிகரிக்கும் நோக்கோடு வெளிநாட்டு முதலீடுகளை நம் நாடு எதிர்பார்த்து உள்ளது. அதற்காக பல அரசியல் பிரமுகர்களும் நாடு நாடாய் பறந்து செல்கின்றனர்.

அண்மையில் பிரதமர் சிங்கப்பூர் பிரமுகர்களுடன் அவர்களது முதலிடுகளை வரவழைப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளார். முதலீடுகளை மேற்கொள்ளாவிட்டாலும் நம் நாட்டைச் சுற்றிப் பார்த்து விட்டுச் செல்லுமாறு தயவுடன் கேட்டுள்ளார். இதே சிங்கப்பூர் 1950 களில் எம்மை அண்ணார்ந்து பார்த்து வியப்படைந்த நாடு ஆகும். அங்கு இனப்பிரச்சினை இல்லை. அகதிகள் பிரச்சினை இல்லை. மதப்பாகுபாடுகள் இல்லை. ஆதலால் வறுமை இல்லை. வன்முறை இல்லை. அபிவிருத்திக்கும் பஞ்சம் இல்லை.

அதே வேளை நம் நாட்டு இன வன்முறையால் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து பல லட்சம் தமிழ் மக்கள் அந்நிய தேசங்களில் வாழ்கின்றனர். இவர்களில் பலர் அங்கு பெரும் தனவந்தர்களாகவும் ஏன் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். தங்களது சொந்த மாடி மனைகளை அந்த நாட்டு வெள்ளை இன மக்களுக்கு வாடகைக்கு கொடுத்து பணம் சம்பாதித்து வருவோரும் உள்ளனர்.

ஆனாலும் இவர்கள் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் தங்களது செல்வங்களை பெருமளவில் அவர்கள் பிறந்த தேசத்தில் அவர்களது மண்ணில் முதலிடவில்லை. தமிழர்கள் என்ற காரணத்தினால் தங்களது முதலீட்டுக்கு எதிர்காலத்தில் ஆபத்தக்கள் நேரிடலாம் என்ற அச்சமே இதற்கு காரணம் ஆகும்.

இவ்வாறாக பிரச்சினைக்கு உரிய பரிகாரங்கள் காலடியில் இருக்க பல நாடுகளுக்கும் ஏன் செல்ல வேண்டும்.?
இவர்கள் தமிழ் மக்களுடன் உறவாடி உரையாடி அவர்கள் இழந்த இறைமையை அவர்களுக்கு வழங்கின் நம் நாடு உண்மையில் ஆசியாவின் அதிசயம். அது வரை?

காரை துர்க்கா…

Leave a comment