பரபரப்பான அரசியல் மாற்றம் – இன்றிரவு தீர்மானம்

261 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச் செய்வதா? அல்லது தோல்வியடையச் செய்வதா? என்ற தீர்மானம் இறுதி நேரம் வரை அறியப்பட முடியாத ஒன்றாக இருப்பது அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நேற்றிரவு (03) கூடிய கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்று (04) காலையிலும் அக்கட்சி கூடவுள்ளதாகவும் அக்கட்சி தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும்,  அக்கட்சியில் உள்ள 16 உறுப்பினர்களில் 4 வாக்குகள் பிரேரணைக்கு ஆதரவாக  அளிக்கப்படவும், 8 வாக்குகள் பிரேரணைக்கு எதிராக அளிக்கப்படவும், எஞ்சியுள்ள 4 பேரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாதிருக்கவும் முடியும் என இதுவரை இடம்பெற்றுள்ள கலந்துரையாடலில் இருந்து தெரியவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சபாநாயகர் தவிர்த்து பாராளுமன்றத்தில் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 16 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். இவர்களை விட்டு விட்டுப் பார்ப்பதாயின், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சார்பாகவோ, எதிராகவோ கிடைக்கவுள்ள மொத்த வாக்குகள் 208 ஆகும். இதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச் செய்ய 105 வாக்குகள் பெறப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மொத்தம் 106 வாக்குகள் உள்ளன. அக்கட்சியில் மூன்று பேரில் வாக்குகள் கட்சிக்கு சார்பாக கிடைக்காது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார அறிவித்திருந்தார். அவ்வாறு நிச்சயமில்லாத வாக்குகள், விஜேதாச ராஜபக்ஷ, அத்துரலிய ரத்ன தேரர், சத்துர சேனாரத்ன ஆகியோருடையது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஐ.தே.க.யின் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவும் எதிராக வாக்களிப்பதாக அறிவித்துள்ளார்.

இதன்படி, ஐ.தே.கட்சிக்கு தற்பொழுதுள்ள மொத்த வாக்குகள் 102 ஆகும்.

கூட்டு எதிர்க் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து பார்க்கும் போது அவர்களிடம் மொத்தமாக 95 வாக்குகள் உள்ளன. டக்ளஸ் தேவானந்தா எம்.பி.யுடன் அந்த எண்ணிக்கை 96 ஆகும். மக்கள் விடுதலை முன்னணியும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சார்பாக வாக்களிப்பதாக கூறியுள்ளது. அக்கட்சியில் 6 வாக்குகள் உள்ளன.

அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களில் விஜித் விஜேமுனி சொய்ஷா உட்பட 13 பேர் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. துமிந்த திஸாநாயக்க உட்பட இருவர் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகவும் தற்பொழுது வரையுள்ள கள நிலவரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்கெடுப்பு நடாத்தும் போது இரு தரப்பிலிருந்தும் ஒருவராவது சமூகமளிக்காது போனால், அது இரு தரப்புக்கும் பாதிப்பாக அமைந்துவிடும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

Leave a comment