மக்கள் நிலங்களை நிச்சயம் விடுவிப்பார்களாம் -வேதநாயகன்

386 0

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க, இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரின் பதவி காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் உள்ள பொதுமக்களின் நிலங்கள் முழுமையாக விடுவித்து தரப்படும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை நல்லிணக்கபுரம் வீட்டு திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 25 பயனாளிகளுக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இன்று வீடுகள் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டன.

பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சிறப்பு அதிதிகளாக இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளை பயனாளிகளிடம் வழங்கினர்.

இந்த வைபவத்தில் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றிய போதே அரசாங்க அதிபர் வேதநாயகன் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

யாழ்ப்பாண தமிழ் மக்களின் பிரச்சினைகளை உண்மையிலேயே தீர்த்து தர வேண்டும் என்பதில் இராணுவ தளபதி, யாழ். மாவட்ட கட்டளை தளபதி ஆகியோர் மிகுந்த அக்கறையுடனும், கரிசனையுடனும் உள்ளனர்.

இராணுவ தளபதியை பற்றி கூறுவதானால் அவர் யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக முன்பு கடமையாற்றியவர்.

அவருடைய அக்காலத்தில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல், வழிகாட்டல் ஆகியவற்றுக்கு அமைய நல்லிணக்கபுரம் வீட்டு திட்டம் உருவாக்கப்பட்டது.

அவர் எமது மக்களின் பிரச்சினைகளை மிக நன்றாகவே அறிந்தவர்.

அந்தப் பிரச்சினைகளை உரிய முறையில் விரைவாக தீர்த்து தர வேண்டும் என்று விரும்புபவர்.

அதேபோல தற்போது யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக பதவி வகிக்கின்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மிகவும் எளிமையானவர் மாத்திரம் அல்லர் பழகுவதற்கு இனிமையானவரும் கூட. எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தர வேண்டும் என்பதில் அவரும் மிகுந்த பேரார்வம் காட்டி வருகின்றார்.

எனவே இவர்கள் இருவரினதும் காலத்தில்தான் எமது காணிகள் விடுவித்து தரப்படும்.

ஏனென்றால் இவர்கள் இருவரும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருகின்ற விடயங்களை சிறந்த முறையில் அணுகிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நல்லிணக்கபுரம் வீட்டு திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 25 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படுகின்ற வைபவத்தில் இருவரும் பங்கேற்று இருப்பது பேருவகை தருகின்றது.

மேலும் நல்லிணக்கபுரம் வீட்டு திட்டமாக இருந்தாலும் சரி வேறு எந்த திட்டமாக இருந்தாலும் சரி இராணுவத்தின் பங்களிப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றுடன்தான் அதை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிகின்றது என்று தெரிவித்தார்.

Leave a comment