ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவானது.
ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடு பப்புவா நியூகினியா. இங்குள்ள நியூபிரிட்டன் தீவில் ரபாயுல் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். நியூபிரிட்டன் தீவு சுற்றுலா தலமாகும்.
எனவே இங்கு பல ஓட்டல்கள் உள்ளன. நிலநடுக்கம் காரணமாக ஓட்டல்களும் குலுங்கின. இதனால் அங்கு தங்கியிருந்த மக்கள் அறைகளில் இருந்து வெளியேறி ரோட்டில் தஞ்சம் அடைந்தனர்.
இங்கு 6.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது. இது கடற்கரையில் பூமிக்கு அடியில் 35 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் அங்கு வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. உயிரிழப்பு விவரங்களும் எதுவும் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி 26-ந்தேதி எங்கா மாகாணத்தில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தால் 100 பேர் பலியாகினர்.

