காவிரி விவகாரம்- ஏப்ரல் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. முடிவு

465 0

காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. செயற்குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. 

காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும்  மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு முடிந்தும் காவிரி பிரச்சனையில் எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் தி.மு.க. எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 517 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும், இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு துணைபோவதாகவும் குற்றம்சாட்டி பேசினார்கள். மத்திய அரசுக்கு அடிபணிந்து தமிழக அரசு செயல்படுவதால் மாநில உரிமைகள் பறிபோவதாகவும், பேசினார்கள். எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று பலர் பேசினார்கள்.

அதன்பின்னர், ஏப்ரல் 2-ம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளனர்.

இதேபோல் ஸ்டெர்லைட் விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தக் கோரியும், கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்தாத கூட்டுறவு ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a comment