தலிபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக மலாலா யூசுப் பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் அவரது பெற்றோரும் வந்துள்ளனர்.
பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பெண் கல்விக்கு எதிராக உள்ளனர். பள்ளிக்கூடங்களை தாக்கி அழிப்பது, பள்ளிக்கூடத்துக்கு செல்லும் பெண்களை தாக்குவது போன்றவற்றிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியை சேர்ந்த 15 வயது மலாலா பெண் கல்வியை ஆதரித்து குரல் கொடுத்து வந்தார். பத்திரிகைகளிலும் கட்டுரை எழுதினார்.
இதனால் கோபம் அடைந்த தலிபான் பயங்கரவாதிகள் 2012-ம் ஆண்டு அவரை துப்பாக்கியால் சுட்டனர். பள்ளிக்கூட பஸ்சில் பயணம் செய்த போது இந்த தாக்குதல் நடந்தது.
இதில், மலாலா பலத்த காயம் அடைந்தார். அவருடைய தலையில் குண்டு பாய்ந்து சேதம் ஏற்பட்டு இருந்தது.
ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளித்தனர். அவரது மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டு ஆபரேசன் நடந்தது. இதன் பிறகு முழுமையாக தேறினார்.
அதை தொடர்ந்து அவர் தனது பெற்றோருடன் லண்டனிலேயே வசித்து வருகிறார். 2014-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதன் பிறகு பெண் கல்வி உரிமைக்காகவும், குழந்தைகள் கல்விக்காகவும் தொடர்ந்து ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். ஐ.நா.வின் இளைஞர் தூதராகவும் அவர் இருக்கிறார்.
இந்த நிலையில்தான் தாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக அவர் இப்போது பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் அவரது பெற்றோரும் வந்துள்ளனர். 4 நாள் பயணமாக அவர் வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அவரை தலிபான் பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கலாம் என கருதுவதால் அவரது சுற்றுப்பயணம் முழுவதும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமர் அப்பாசி மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கி காரில் பயணம் செய்யும் காட்சிகளை பாகிஸ்தான் டெலிவிஷன்கள் ஒளிபரப்பின. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

