பா.ஜனதாவை எதிர்க்க தயாராகும் திராவிட நாடு மாநிலங்கள்

218 0

மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய 6 மாநிலங்களும் ஒன்றாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. இதனால் மீண்டும் திராவிட நாடு கொள்கை வலுப்பெற தொடங்கியுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வடநாடு, தென்நாடு என்ற பாகுபாடு இருந்து வருகிறது. எந்த திட்டங்கள் என்றாலும் வட இந்தியாவுக்குத்தான் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. தென் மாநிலங்கள் அதன் சொந்த முயற்சியில் தான் தொழில் வளம் பெற்று வருவதாக கருத்து நிலவுகிறது.

நதிநீர் பங்கீடு வி‌ஷயமாக இருந்தாலும் சரி, நிதி ஒதுக்கீடு, மின்சாரம், ரெயில்வே போன்ற எந்த துறையாக இருந்தாலும் சரி தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பரவலான கருத்து உள்ளது. அதே சமயம் வரி வசூலில் தென் மாநிலங்களின் பங்கு அதிக அளவில் இருக்கிறது. அந்த நிதி பின்தங்கிய வட மாநிலங்களுக்கு போய் சேர்கிறது.

வட மாநிலங்களில் நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிட்டு சுமூக உடன்பாடு காண்கிறது. ஆனால் காவிரி, கிருஷ்ணா, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனையில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு உடன்பாடு காணாமல் தென் மாநில அரசுகளை மோதவிட்டு கோர்ட்டு மூலமே தீர்வுகாணும் நிலையை உருவாக்குகிறது.

இந்த போக்கு காலம் காலமாக இருந்து வருவதால் தென் மாநிலங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு இருக்கின்றன.

தற்போது மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய 6 மாநிலங்களும் ஒன்றாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளன.

இதனால் மீண்டும் திராவிட நாடு கொள்கை வலுப்பெற தொடங்கியுள்ளது. தமிழகத்தில் காவிரி, முல்லை பெரியாறு, மீனவர் பிரச்சனை ஆகியவை தீர்க்கப்படாமல் இருப்பதால் மத்திய அரசு மீது அதிருப்தி நிலவுகிறது.

மற்ற மாநிலங்களிலும் தீராத பிரச்சனைகளால் மத்திய அரசுக்கு எதிராக கட்சிகள் கிளம்பியுள்ளன.

பா.ஜனதாவின் கூட்டணி கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி தங்கள் மாநில பிரச்சனைக்காக கூட்டணியை முறித்துக் கொண்டதுடன் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுபோல், கர்நாடகம், கேரளா, புதுவை மாநிலங்களும் மத்திய அரசுடன் முட்டி மோதிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் அரசியல் கட்சிகள் மீண்டும் ‘‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’’ கோ‌ஷத்தை எழுப்ப தொடங்கியுள்ளன. 1939-ல் நீதிக்கட்சி தலைவராக இருந்த பெரியார் திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற முழக்கத்தை முதன்முதலில் தொடங்கினார்.

அதன்பிறகு சீனாவுடனான போர் உள்ளிட்ட பல நெருக்கடியான கால கட்டங்களில் மத்திய அரசை பலப்படுத்த திராவிட நாடு கொள்கையை கட்சிகள் கைவிடுவதாக அறிவித்தன.

தற்போது மீண்டும் திராவிட நாடு கோ‌ஷம் தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் கொள்கைகள் திராவிடம் சார்ந்தது என்று அறிவித்தார். திராவிட நாடுகள் அடங்கிய வரைபடத்தையும் வெளியிட்டார்.

அவரைத் தொடர்ந்து திராவிட நாடு ஒற்றுமைக்கு ஆதரவாக குரல் எழத் தொடங்கியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் பொலிட்பிரோ உறுப்பினரான எம்.ஏ. பேபி கூறுகையில், ‘‘பிரதமர் மோடிக்கு எதிராக தென் மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய கூட்டணி அமைக்க வேண்டும்’’ என்றார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. ஆதரவு அளித்து இருப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பதை வரவேற்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வி.ஆர்.சுதர்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘நாம் எல்லாம் திராவிடர்கள். நமது வம்சாவளியை திரும்பி பார்க்க வேண்டும். அதுதான் தென் மாநிலங்களின் முன்னேற்றத்துக்கும் பலத்துக்கும் வழிவகுக்கும். கமல்ஹாசன் இடது சாரி கொள்கைகளை பிரதிபலிக்கிறார். தி.மு.க. எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு பா.ஜனதா கூட்டணியில் அதிருப்தியில் உள்ளார்’’ என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியால் மாநில அரசு பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகிவருகிறது. தமிழக அரசிலும் கவர்னர் தலையீடு இருப்பதாக கருத்து நிலவுகிறது. எனவே 2019 பாராளுமன்ற தேர்தலில் திராவிட நாடு மாநிலங்கள் பா.ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக திரளும் வாய்ப்பு உருவாகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தென் மாநிலங்களில் தான் ரெயில்வேயில் அதிக வருவாய் கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. வருமான வரி போன்றவற்றிலும் தென் மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. ஆனால் அந்த நிதி வடமாநிலங்களுக்கு செலவிடப்படுவதாகவும், தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா வட மாநிலங்களில் ஆட்சியை பிடித்தாலும், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் தடம்பதிக்க முடியவில்லை. கர்நாடகத்தில் ஒரு முறை ஆட்சியைப் பிடித்தாலும் எடியூரப்பாவின் ஊழலால் ஆட்சியை இழந்துவிட்டது. தென் மாநிலங்களில் பா.ஜனதா எதிர்ப்பு கொள்கை வேகமாக பரவுவதால் வருகிற பாராளுமன்ற தேர்தல் அதற்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a comment