பணியாளர்கள் கூடுதலான நேரம் வேலை செய்வதை தவிர்க்கும் வகையில் இரவு 8 மணிக்கு மேல் அரசு அலுவலக கம்ப்யூட்டர் இணைப்புகளை துண்டிக்க தென்கொரியா அரசு தீர்மானித்துள்ளது.
உலகிலேயே தென்கொரியாவில் உள்ள மக்கள் அதிகமான நேரம் பணியாற்றுகின்றனர். அவர்கள் வேலை நேரத்தை விட கூடுதலான நேரம் பணியாற்றுகின்றனர். இதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை குறைக்க தென்கொரியா அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள அரசு அலுவலகங்களில் இரவு 8 மணிக்கு மேல் அனைத்து கம்ப்யூட்டர் இணைப்புகளை துண்டிக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முதல்கட்டமாக மார்ச் 30-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இரண்டாவது கட்டமாக ஏப்ரல் மாதம் முதல் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு அனைத்து கம்ப்யூட்டர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். அடுத்த மே மாதம் முதல் அனைத்து வெள்ளிக்கிழமையிலும் 7 மணிக்கு கம்ப்யூட்டர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடும் போது தென்கொரியா பணியாளர்கள் ஆண்டிற்கு ஆயிரம் மணி நேரம் அதிகமாக பணியாற்றுகின்றனர். சமீபத்தில் தென்கொரிய பாராளுமன்றத்தில் பணியார்கள் ஒரு வாரம் வேலைப்பார்க்கும் அதிகபட்ச நேரத்தை 68 லிருந்து 52 ஆக குறைக்க வேண்டும் என புதிய சட்டம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

