ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு

462 0

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் போராட்டமொன்று இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் சமூக முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ் இளைஞர்கள் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் குறித்த கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் குறித்த கருணை மனுக்களில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் நலனைக் கருத்திற்கொண்டு விடுதலை செய்யுமாறு குறித்த கருணைமனுவில் கோரப்பட்டுள்ளதுடன், இதன்போது பொதுமக்களி;டம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இக்கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இச்செயற்பாட்டிற்கு பொது அமைப்புக்கள் பலவும் தமது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இருவரும் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளான கனிதரன் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும்
வடக்கு மாகாண ஆளுநர் ஜெறினோல்ட் குரேயைச் சந்தித்துள்ளனர்.
தமிழர் சமூக முன்னேற்ற நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய, சிவன் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் மனைவி யோகராணி இறந்த பின்பு கனிதரன், சங்கீதா ஆகிய பிள்ளைகள் இருவரும் பெற்றோர் இன்றி நிர்க்கதியாகியுள்ள விடயத்தை கணேஸ்வரன் வேலாயுதம் வடக்கு மாகாண ஆளுநரிடம் எடுத்துக் கூறினார். அத்துடன் தாயாரின் இறுதிக்கிரியையின்போது 3 மணித்தியாலங்கள் பரோலில் வெளியேவந்த ஆனந்தசுதாகர் சிறைச்சாலைக்குத் திரும்பிச் செல்லும்போது அவருடைய மகள் சங்கீதா தந்தையுடன் சிறைச்சாலைப் பேருந்தில் ஏறிய சம்பவத்தையும் அவர் எடுத்துக் கூறினார். மேலும் ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருமாறும் சிவன் பவுண்டேசன் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதம் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் முழுமையாகக் கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதி தற்போது வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதால், அவர் நாடு திரும்பியதும் இரு பிள்ளைகளும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பிலிருந்து மீண்டும் தான் யாழ்ப்பாணம் திரும்பியவுடன் ஆனந்தசுதாகரின் வீட்டிற்குச் சென்று பிள்ளைகளுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுப்பதாவும் வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Leave a comment