பார்முலா1 கார்பந்தயம்: ஜெர்மனி வீரர் வெட்டல் வெற்றி!

874 0

பார்முலா1 கார்பந்தய போட்டியில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 1 மணி 29 நிமிடம் 33.283 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த சீசனின் முதல் பந்தயமான ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி மெல்போர்னில் உள்ள ஓடுதளத்தில் நேற்று நடந்தது.

307.574 கிலோமீட்டர் தூரம் கொண்ட பந்தய இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 4 முறை சாம்பியனான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டலுக்கும் (பெராரி அணி), முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனுக்கும் (மெர்சிடஸ் அணி) இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் செபாஸ்டியன் வெட்டல் 1 மணி 29 நிமிடம் 33.283 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. அவரை விட 5.036 வினாடி மட்டுமே பின்தங்கி 2-வது இடத்தை பிடித்த ஹாமில்டன் 18 புள்ளிகளை பெற்றார். 3-வதாக பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் வந்தார்.

போர்ஸ் இந்தியா வீரர்களான செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகோன் (பிரான்ஸ்) முறையே 11, 12-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தனர். 2-வது சுற்று போட்டி ஏப்ரல் 8-ந்தேதி பக்ரைனில் நடக்கிறது.

Leave a comment