பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச் செய்வதா? அல்லது தோல்வியடையச் செய்வதா? என்ற தீர்மானம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கையில் இருப்பதாக கூட்டு எதிர்க் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவித்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ள 16 உறுப்பினர்களின் வாக்குகளும் தான் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தீர்மானிக்கவுள்ளதாகவும் அவ்விரு கட்சிகளும் குறிப்பிட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியும், கூட்டு எதிரணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளச் செய்வதற்கான முயற்சியை கூட்டு எதிர்க் கட்சி முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சபாநாயகர் தவிர்த்து பாராளுமன்றத்தில் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 16 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். இவர்களை விட்டு விட்டுப் பார்ப்பதாயின், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சார்பாகவோ, எதிராகவோ கிடைக்கவுள்ள மொத்த வாக்குகள் 208 ஆகும். இதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச் செய்ய 105 வாக்குகள் பெறப்பட வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் மொத்தம் 106 வாக்குகள் உள்ளன. அக்கட்சியில் மூன்று பேரில் வாக்குகள் கட்சிக்கு சார்பாக கிடைக்காது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார அறிவித்திருந்தார். அவ்வாறு நிச்சயமில்லாத வாக்குகள், விஜேதாச ராஜபக்ஷ, அத்துரலிய ரத்ன தேரர், சத்துர சேனாரத்ன ஆகியோருடையது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, ஐ.தே.கட்சிக்கு தற்பொழுதுள்ள மொத்த வாக்குகள் 103 ஆகும்.
கூட்டு எதிர்க் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து பார்க்கும் போது அவர்களிடம் மொத்தமாக 95 வாக்குகள் உள்ளன. டக்ளஸ் தேவானந்தா எம்.பி.யுடன் அந்த எண்ணிக்கை 96 ஆகும். மக்கள் விடுதலை முன்னணியும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சார்பாக வாக்களிப்பதாக கூறியுள்ளது. அக்கட்சியில் 6 வாக்குகள் உள்ளன.
இதன்படி பார்க்கும் போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சார்பாக 102 வாக்குகள் உள்ளன.
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிக்குள் தமிழ் முற்போக்கு முன்னணியில் 6 உறுப்பினர்கள் உள்ளனர். ரிஷாட் பத்தியுத்தீன் அமைச்சரிடம் 5 வாக்குகள் உள்ளன. முஸ்லிம் காங்கிரஸிடம் 7 பேர் உள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆகும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்கெடுப்பு நடாத்தும் போது இரு தரப்பிலிருந்தும் ஒருவராவது சமூகமளிக்காது போனால், அது இரு தரப்புக்கும் பாதிப்பாக அமைந்துவிடும்.
இந்த வகையில் பார்க்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த வகையில் ஆதரவு வழங்குகின்றதோ அதன்படியே நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி தோல்வி கருதப்படும் எனவும் ஐ.தே.க.யினதும், கூட்டு எதிரணியினதும் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

