லோக்பால், லோக் ஆயுக்தா, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளார்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் ஜன் லோக்பால் அமைப்பை கொண்டுவர வேண்டும். விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
அவரது போராட்டத்துக்கு பெருத்த ஆதரவு கிடைத்தது. இதையடுத்து, ஜன் லோக்பால் அமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் என அப்போதைய மத்திய அரசு உறுதி அளித்ததால் அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஆனால் மத்திய அரசு ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வரவில்லை.
அதன்பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வருவோம்’’ என பா.ஜ.க. உறுதியளித்தது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வரவில்லை.
இந்நிலையில், லோக்பால், லோக் ஆயுக்தா, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஜன் லோக்பால் அமைக்காதது குறித்து அமைதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், விச்வாயிகள் பிரச்சினையிலும் மத்திய அரசு மெத்தன போக்குடன் நடந்து வருகிறது. எனவே, தியாகிகள் தினமான மார்ச் 23 ஆம் தேதி (இன்று) போராட்டத்தை தொடங்க உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
அன்னா ஹசாரே போராட்டம் நடத்த இருப்பதால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

