பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கையொப்பமிட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகரிடம் ஒப்படைத்தார்.
குறித்த பிரேரணையில் பிரதமர் மீது நம்பிக்கையில்லாமல் போவதற்கான 14 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- முறிகள் மோசடிக்கு வழி சமைக்கும் வகையில் வழமையான நடைமுறைக்கு மாறாக மத்திய வங்கியை நிதி அமைச்சிலிருந்து நீக்கி பிரதமரின் கீழ் கொண்டுவந்தமை.
- உறவு முறைக்கு சாரமாக செயற்படக்கூடிய, நாட்டின் பிரஜை அல்லாத கறை படிந்த வரலாறு உள்ள அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டமை.
- அண்மைக்காலத்தில் உலகில் இடம்பெற்ற மிகப்பெரிய நிதி மோசடியான முறிகள் மோசடியுடன் பிரதமர் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும் நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமது அரசியல் நண்பர்களைக் கொண்ட ‘பிட்டிபனை’ குழுவை நியமித்து ஊழலில் ஈடுபட்டவர்களை பிரதமர் காப்பாற்ற முயற்சித்துள்ளதாகவும் அதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- உண்மையான விடயங்களை மழுங்கடிக்கும் வகையில், ஊழலில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதை நோக்காகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி விசேட உரையாற்றி, பாராளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாகவும் அந்தப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஊழல் தொடர்பில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உறுப்பினர் ஒருவரை மாற்றி மற்றுமொருவரை கோப் குழுவிற்கு நியமித்து, குற்றவாளிகளை நிரபராதிகளாக நிரூபிப்பதற்கு பிரயத்தனம் மேற்கொண்டமை மற்றுமொரு விடயமாகும்.
- கோப் குழு செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் விசாரணை நடைபெற்ற காலப்பகுதியில் அதன் உறுப்பினர்களுக்கு அழுத்தம் பிரயோகித்ததாகவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முறிகள் மோசடியுடன் தொடர்புபட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் உறுதி செய்யப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பீ. சமரசிறியை நிதி அமைச்சின் ஆலோசகர் பதவிக்கு நியமிக்குமாறு அமைச்சரவையில் பரிந்துரைத்தமையும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- வேறு ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது மீண்டும் அர்ஜுன மகேந்திரனை அந்தப் பதவிக்கு நியமிக்க முயற்சித்ததாகவும் பிரேரணையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- முறிகள் மோசடி காரணமாக பதவியை இழந்த பின்னரும் அர்ஜுன மகேந்திரனுக்கு பிரதமர் தமது அமைச்சில் பதவி வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
- நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளாது அர்ஜுன மகேந்திரன் நாட்டிலிருந்து வௌியேறி நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை பிரதமருக்கு எதிரான நம்பிக்கை பழுதடைவதற்கான மற்றுமொரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிதி அமைச்சரால் மாத்திரம் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய 9 சட்டங்களை, மத்திய வங்கியை தமது அமைச்சின் கீழ் கொண்டு வந்ததன் ஊடாக நடைமுறைப்படுத்தி, அந்த சட்டத்தை மீறியதாகவும் பிரதமருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- பொருளாதார விவகார அமைச்சு, பொருளாதார முகாமைத்துவ உபகுழு ஊடாக நிதி அமைச்சையும் மத்திய வங்கியையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தேசிய பொருளாதாரத்தை வழிநடத்த முயன்றதால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அத்தோடு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்தபோது கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களின் போது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கத்தவறியமையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த விடயங்கள் காரணமாக அவர் பதவி வகிக்கும் அரசின் செயற்பாடுகள் தொடர்பில் நம்பிக்கைகொள்ள முடியாது என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

