மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேறும் – சட்டசபையில் முதல்வர் பேச்சு

355 0

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேறும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சட்டசபையில் இன்று எதிர்க் கட்சி துணைத் தலைவர் பேசும்போது, “அமைதி, வளம், வளர்ச்சி என்று நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆனால் கொலை, கொள்ளை, வெட்டு, ரவுடிகள் ஒன்றாக கொண்டாடுவதுதான் அமைதி” என்றார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (குறுக்கிட்டு):- ரவுடிகள் ஒரே நாளில் உருவாக்கக் கூடியவர்கள் அல்ல. உங்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களை கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் அவர்களை கண்டுபிடித்து இருக்கிறோம்.

துரைமுருகன்:- கேக் வெட்டி கொண்டாடியது உங்கள் ஆட்சியில்.

முதல்-அமைச்சர்:- அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தது நாங்கள். தற்போது ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. குற்றங்கள் குறைந்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது.

துரைமுருகன்:- தமிழகத்தை வளப்படுத்துவோம் என்றீர்கள். ஆனால் வளம் இல்லை. வறுமைதான் இருக்கிறது.

முதல்-அமைச்சர்:- 2011 முதல் 2016 வரை நாங்கள் ஆட்சி செய்தோம். மீண்டும் 32 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2-வது முறையாக அம்மா தலைமையிலான ஆட்சியைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். 2011 வரை இந்த மாநிலம் எப்படி இருந்தது. அதற்குப் பிறகு அம்மாவின் திட்டத்தால் எப்படி வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்பதை நீங்கள் படித்துப் பார்த்து இருந்தால் உங்களுக்கு அது புரிந்து இருக்கும்.

2011 வரை தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்றவர்கள் 21 சதவீதம்தான். அம்மா கொண்டு வந்த திட்டங்களால் அந்த சதவிதம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. பல்வேறு துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்து இருக்கிறது.

துரைமுருகன்:- நீங்கள் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது அதிகம் பேச மாட்டீர்கள். இப்போது நிறைய பேசுகிறீர்கள். அதுவும் கூட வளர்ச்சிதான். இதற்கு முன் தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதம் இருந்தது. நாங்கள் அதை 10 சதவீதம் ஆக்குவோம் என்று இதற்கு முந்தைய பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் 2013-14ல் உங்கள் ஆட்சியில் வளர்ச்சி விகிதம் 4.16தான். தொடர்ந்து வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது. தொழில் வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் பின்னோக்கி செல்வது தெரியவந்துள்ளது.

அமைச்சர் எம்.சி.சம்பத்:- மத்திய அரசு 2 விதமாக உள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தில் நாம் 4-வது இடத்தில் இருக்கிறோம்.

முதல்-அமைச்சர்:- அகில இந்திய அளவில் உணவு- தானிய உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கான கேடயம் நமக்கு கிடைத்து இருக்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் இருக்கிறது.

துரைமுருகன்:- மதுரை-தூத்துக்குடி சாலை போடுவதை 5 வருடமாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

முதல்-அமைச்சர்:- இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலைகள் அதிக அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. மத்திய மந்திரியே 2 முறை வந்து திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

துரைமுருகன்:- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தாமதம் ஆகி கொண்டே வருகிறது.

முதல்-அமைச்சர்:- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் சில மாற்றங்களுடன் விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a comment