ஐகோர்ட்டு உத்தரவிட்டும் காவல்துறையினரின் பிரச்சினைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
காவலர்களின் குறைகளை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மன நல மருத்துவர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் சமீபத்தில் காவலர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் 2012-ம் ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தக்கோரி வக்கீல் புருஷோத்தமன் உள்பட சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, காவலர்களின் குறைகளை தீர்க்க குழு அமைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், குழு அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக கடந்த 12-ந் தேதி டி.ஜி.பி. தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:-
காவல்துறையினரின் பிரச்சினைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க 6 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டும் இன்னும் ஏன் அமைக்கவில்லை?. இது கண்டனத்துக்கு உரியது. காவலர்களுக்கு பணி நேரம் என்று இல்லாதது அவர்களை மனதளவில் மிகவும் சோர்வடையச் செய்கிறது. சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு கூட அவர்களுக்கு விடுமுறை கிடைப்பது இல்லை. குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா?. காவலர்களுக்கு இல்லையா?.

ஹெல்மெட் அணியாமல் சென்றவரை விரட்டிய போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மீது அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். ஹெல்மெட் அணியாமல் சென்றதும், மோட்டார் சைக்கிளை காவலர் நிறுத்திய போதும் நிறுத்தாமல் சென்றதும் தவறு தான் என்பதை யாரும் கூற மறுக்கின்றனர். இதுபோன்ற சம்பவம் ஏற்பட காவலர்களின் வேலைப்பளு மற்றும் மன அழுத்தமும் ஒரு காரணம்.
பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்கள் உள்பட அனைத்து காவலர்களும் மணிக்கணக்கில் நிற்க வைக்கப்படுகின்றனர். இயற்கை உபாதைக்கு அவர்கள் எங்கே செல்வார்கள். காவல்துறையினர் பொம்மைகள் அல்ல. அவர்கள் பொது சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் பணிக்கு வருகின்றனர்.
காவல்துறையினரின் வேலைப்பளுவுக்கு உயர் அதிகாரிகளும் காரணமாக உள்ளனர். உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரின் வீடுகளில் காவலர்கள் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசாணை பிறப்பித்தும் இன்று வரை காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் காவலர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
தற்போது உயர் அதிகாரிகளின் வீடுகளில் எத்தனை பேர் ஆர்டர்லி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்?, ஆர்டர்லி முறை ஒழித்து பிறப்பித்த அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், காவலர்களின் குறைகளை களைய அமைக்கப்பட உள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலையும் 22-ந் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

