தமிழ்மொழியில் பௌத்தத்தை கற்பிக்கும் செயற்திட்டம் யாழில் நாளை ஆரம்பம்!

217 0

சிங்கள பிரதேச சிறுவர்களுக்கான தமிழ்மொழியில் பௌத்தத்தை கற்பிக்கும் செயற்திட்டமும், அவ்வாறு கற்க வரும் துறவிகளை பௌத்தராக்கும் நிகழ்வும், நாளையதினம்(19-03-2018) திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சர்வமத குழுவினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்…..

யாழ்ப்பாண சர்வமத குழுவினர் 2008 ஆம் ஆண்டில் இருந்து மொழி, இன, சாதி அடிப்படையில் முரண்பாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் முரண்பாடுகள் ஏற்படும் போது அதை கட்டுப்படுத்துவதற்குமான அறிவூட்டல் செயற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் நாளையதினம் (19-03-2018) ஸ்ரீ நாகவிகாரையின் பிரதான தேரர் மீகம ரத்துரே ஞானரத்ன தேரர் மரித்து 3 மாதங்கள் ஆகின்றது.

இவரின் மூன்று மாத நினைவுதினத்தையொட்டி தானம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.

குறித்த தேரரின் ஆத்மா சாந்தியடைந்து அவரின் மறுபிறப்பு சிறப்பானதாக அமைய வேண்டும் என வேண்டி புண்ணிய ஸ்தான நிகழ்வுகள் தொடா்ச்சியாக நடைபெறுகிறது.

இதில் இரத்த தானம், பாடசாலை பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல், வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்தல் போன்ற பல வேலைத்திட்டங்கள் நடைபெறுகிறது.

குறிப்பாக தென்பகுதியில் உள்ள சிங்கள பாடசாலைகளில் இன ஐக்கியத்துக்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகிறது.

தென் பகுதி, வடக்கு பகுதிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இடம்பெற ஏற்பாடு நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் சிங்கள பிரதேச சிறுவர்களுக்கான தமிழ்மொழியில் பௌத்தத்தை கற்பதற்காகவும், அவ்வாறு கற்க வரும் துறவிகளை பௌத்தராக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் அனைத்து சமயத்தவரின் ஆசியுடன் ஜனாதிபதி தலைமையில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment