சீக்கியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறையை இனப்படுகொலை என்று கனடா அறிவிக்கவேண்டும்!

219 0

இந்தியாவில் மூன்று தசாப்த காலத்தின் முன்னர் சீக்கியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறையை இனப்படுகொலை என்று கனடா அறிவிக்கவேண்டும் என்று புதிய சனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்துள்ள அவர், 1984ஆம் ஆண்டில் அப்போதய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் தன்னிச்சையாக நடந்தவை அல்ல என்பதற்கு தெளிவான ஆதரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவை இந்திய அரசாங்கத்தால் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் இந்த வன்முறைச் சம்பவத்தினை இனப்படுகொலை என்று அங்கீகரிப்பதானது, அந்த காலத்திலிருந்து இன்றுவரை, மிக நீணட காலமாக வலியுடன் வாழ்ந்துவரும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் காயங்களை ஆற்றுவதாக அமையும் என்றும், அத்துடன் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையேயான பதற்றத்தினையும் குறைப்பதற்கு அது வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதிய சனநாயகக் கட்சியின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினராக ஜக்மீட் சிங் இருந்த போது, சீக்கியர்களுக்கு எதிரான இந்த தாக்குதல் ஒரு இனப்படுகொலை என்ற தீர்மானத்தினை 2016ஆம் ஆண்டில் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் முன்வைத்த போதிலும், அது நிறைவேற்றப்படவில்லை.

எனினும் அதன் பின்னர் 2017ஆம் ஆண்டில் அதே போன்றதொரு தீர்மானம் லிபரல் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் இநதியப் பயணத்தின் போது நிலவிய அதிருப்பதிகளுக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இந்திய அரசாங்கத்தினை கோபத்திற்கு உள்ளாக்கியது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Leave a comment