யுகாதி திருநாள்- முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

4795 0

யுகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘‘யுகாதி தின’’ வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

‘‘யுகாதி’’ என்னும் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ‘‘யுகாதி’’ திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகளை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதால், அனைத்து தரப்பு மக்களும் மகிழ்வுடன் வாழும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

பன்னெடுங்காலமாய் தமிழ்நாட்டு மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், மொழியால் வேறுபட்டாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு, தமிழ் மக்களின் நெஞ்சங்களோடு பின்னிப் பிணைந்து, சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் செயலாகும்.

இந்த புதிய புத்தாண்டு, உங்கள் வாழ்வில் அனைத்து நலங்களையும், வளங்களையும், வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்றும் வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment