கும்பகோணம் பள்ளி தீவிபத்து – வக்கீல் அபகரித்த நஷ்டஈடு பணத்தை திருப்பி கொடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

523 0

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் சென்னை வக்கீல் அபகரித்த ரூ.1 கோடி நஷ்டஈடு பணத்தை திருப்பி கொடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 99 குழந்தைகள் கருகி பலியானார்கள்.

இந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் 10 ஆண்டு காலம் நடந்து வந்தது.

இதில் 49 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் தலா ரூ.8 லட்சம் வீதம் தமிழக அரசு நஷ்டஈட்டு தொகையை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி பெற்றோர்களின் வங்கி கணக்கில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி பணத்தை தமிழக அரசு டெபாசிட் செய்தது.

இதற்கிடையே நஷ்டஈடு பணத்தை வக்கீல் அபகரித்துக் கொண்டதாக பலியான குழந்தைகளின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டனர். இதுதொடர்பாக யு.மாரிமுத்து என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழக அரசு நஷ்டஈடு பணத்தை எங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தது.

அதன்பிறகு சில வாரங்கள் கழித்து எங்களுக்காக ஐகோர்ட்டில் வாதாடிய வக்கீல் எஸ்.தமிழரசன் கும்பகோணம் வந்தார். அவர் பலியான குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து சந்தித்தார். எல்லோரிடமும் 2 வெற்று செக்குகளை பெற்றுக் கொண்டார். வெற்றுத்தாளில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு சென்றார்.

அதன்பிறகு வங்கியில் இருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது. அதில் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

உடனே நான் வங்கியில் சென்று விசாரித்த போது எங்களிடம் வக்கீல் தமிழரசன் வாங்கிச் சென்ற வெற்று செக்குகளை பயன்படுத்தி எங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது. இதுபோல் மற்ற பெற்றோர்களின் வங்கி கணக்கில் இருந்தும் பணம் எடுத்துள்ளார்.

தலா ரூ.2.30 லட்சம் வீதம் சுமார் ரூ.1.2 கோடி பணம் எடுத்துள்ளது தெரியவந்தது. ஏற்கனவே அவர் எங்களுக்காக கோர்ட்டில் வாதாடியதற்காக ரூ.3,500 வீதம் மொத்தம் ரூ.3½ லட்சம் வழங்கி விட்டோம்.

இந்த நிலையில் எங்கள் வங்கி கணக்கில் இருந்து எங்களுக்கு தெரியாமல் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த வெற்று செக்கை பயன்படுத்தி ரூ.1.2 கோடி பணத்தை சட்ட விரோதமாக எடுத்துள்ளார். எனவே இதில் கோர்ட்டு தலையிட்டு பணத்தை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது அப்போது வக்கீல் தமிழரசனுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மனு மீதான விசாரணையை வருகிற ஏப்ரல் 9-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Leave a comment